பெரியமேடு:பெரியமேடு, 'மை லேடீஸ்' மாநகராட்சி பூங்கா, போதிய பராமரிப்பில்லாமல் சீரழிந்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில், 15 மண்டலங்களிலும் மொத்தம், 525 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதில் ராயபுரம் மண்டலம், பெரியமேடு பகுதி, ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள, 'மை லேடீஸ்' பூங்கா முக்கியமானது. இந்த பூங்கா மொத்தம், 17 ஆயிரத்து 552 ச.மீ., பரப்பளவு கொண்டது.
துர்நாற்றம்
இங்கு குழந்தைகள், கல்லுாரி மாணவ - மாணவியர், முதியவர்கள் என நாள்தோறும், 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு அழகிய மரங்கள், பூச்செடிகள் உட்பட, 100க்கும் அதிகமான தாவர வகைகள், பார்வையாளர்களை வசீகரிக்கும் வகையில் உள்ளன.
அழகிய சிலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
சமீபகாலமாக, இந்த பூங்கா போதிய பராமரிப்பில்லாமல், பொலிவிழந்து வருகிறது.
இந்த பூங்காவின் சுற்றுச்சுவரின் குறிப்பிட்ட பகுதி உடைந்து காணப்படுகிறது. இதன் நுழைவு வாயில் துவங்கி, பூங்காவின் பெரும்பாலான இடங்களில் குப்பை நிறைந்துள்ளன.
அதேபோல, ஆங்காங்கே காலி மதுபாட்டில்களும் சிதறிக் கிடக்கின்றன. இங்குள்ள மரம், செடி, கொடிகளின் உதிர்ந்த இலைகள் அகற்றப்படாமல், மலை போல குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
கழிப்பறைகள் போதிய பராமரிப்பில்லாமல், துர்நாற்றம் வீசியபடி பூட்டியே கிடக்கின்றன.
குவியும் குப்பை
அதேபோல, இங்குள்ள செயற்கை நீரூற்றுகள் பழுதடைந்து உள்ளன. அதில் பல மாதங்களாக, தேங்கிக் கிடக்கும் தண்ணீர் அகற்றப்படாமல், பாசி படர்ந்துள்ளது.
இதனால், தொற்றுநோய் அபாயமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்ததாவது:
இந்த பூங்காவில் கடந்த பல மாதங்களாக, இதே நிலை தான் நீடித்து வருகிறது. இதனால் பூங்காவின் கட்டமைப்பே, கொஞ்சம் கொஞ்சமாக சிதையத் துவங்கி உள்ளது.
இங்கு குவியும் குப்பை, நாள்தோறும் முறையாக அகற்றப்படுவதில்லை.
பூங்காவின் சுற்றுச்சுவர் உடைந்து, பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், இன்னும் சரி செய்யப்படவில்லை.
கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல், பூட்டப்பட்டே இருப்பதால் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள், பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இங்கு வரும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வெகுவாக கவர்ந்த செயற்கை நீரூற்றுகள், பல மாதங்களாக பழுதடைந்து காணப்படுகின்றன.
ஆனாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.