சிந்தாதிரிப்பேட்டை:சிந்தாதிரிப்பேட்டை, மே தின மாநகராட்சி விளையாட்டுத் திடலில்,பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, அருணாச்சலம் சாலை பகுதியில், மே தின மாநகராட்சி விளையாட்டுத் திடல் உள்ளது.
இங்கு, இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்தில் பல்வேறு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடமும் உள்ளது. அதுமட்டுமின்றி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான போதிய கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், என மொத்தம், 600க்கும் மேற்பட்டோர், நாள்தோறும் இந்த திடலைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது இந்த திடலைச் சுற்றி, பாதி அளவிற்கு மட்டுமே சுற்றுச்சுவர் உள்ளது.
பாதி சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவரை உடைத்து, விளையாட்டுத் திடலில் ஆக்கிரமித்து சில வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து, விளையாட்டுத் திடலை மீட்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த பல ஆண்டுகளாக, இந்த விளையாட்டுத் திடலில் ஆக்கிரமிப்பு அரங்கேறி வருகிறது. ஆனால், மாநகராட்சி சார்பில், இதுவரை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த நிலை நீடித்தால், திடலின் உள்ளே உள்ள இடத்தை, இன்னும் அதிகமானோர் ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது.
இங்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டால் தான், ஆக்கிரமிப்பாளர்களால் அத்துமீற முடியாது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விளையாட்டுத் திடலில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அந்த சுற்றுச்சுவர் அமைப்பதற்கான மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் சில மாதங்களில், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் துவங்கும்.
அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.