திருப்பூர்;அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் சேவைகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென, தனியார் 'இ-சேவை' மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் மற்றும் 'எல்காட்' சார்பில், இ -சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து சேவை மையங்களிலும் ஒரே மாதிரி சேவை அளிக்க உத்தரவிடப்பட்டது.
பெரும்பாலான அரசு சேவைகள், 'இ-சேவை' மையம் வாயிலாக மட்டுமே கிடைக்கிறது. போதிய சேவை மையங்கள் இல்லாததால், கூடுதல் சேவை மையம் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அவ்வகையில், மாவட்டத்தில், 540க்கும் அதிகமான தனியார் 'இ-சேவை' மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் 'இ-சேவை' மையத்தில், அரசு சேவைகள் முறையாக வழங்க, மின்னாளுமை முகமை வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
கலெக்டர் அலுவலகத்தில், மின்னாளுமை திட்ட அலுவலர் மூலமாக, பயிற்சி அளிக்கப்பட்டது. உடுமலை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம் தாலுகாவுக்கு காலையும், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, ஊத்துக்குளி தாலுகாக்களுக்கு மதியமும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மின்னாளுமை திட்ட முகமை மேலாளர் முத்துக்குமார், தனியார் 'இ-சேவை' மையத்தினருக்கு பயிற்சி அளித்தார். சேவை மையம் அமைப்பது, அரசு வழங்கும் ரகசிய குறியீடு மற்றும் கடவு சொல்லை பயன்படுத்துவது; மக்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
அரசு அறிவித்த கட்டணத்தில், சேவைகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். விண்ணப்ப பதிவு விவரத்தை, விண்ணப்பதாரர் சரிபார்க்க வசதியாக, சேவை மையங்களில், இரண்டு 'மானிட்டர்' வசதி செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.