திருப்பூர்:மேலும் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன் 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 2015 முதல், எட்டு ஆண்டுகளில், 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது. மேலும் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்குடன், ஒன்பதாவது திட்டம் துவக்க விழா நேற்று, திருப்பூர் அடுத்துள்ள சோளிபாளையத்தில் நடந்தது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் ஆகியோர், மரக்கன்றுகளை நட்டு, 'வனத்துக்குள் திருப்பூர் -9' திட்டத்தை துவக்கி வைத்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார்துரைசாமி வரவேற்றார். திட்ட இயக்குனர்கள் சிவராம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர், திட்டத்தை விளக்கி பேசினர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் தமிழ்வேந்தன் பேசுகையில், ''எட்டு ஆண்டுகளில், 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளது, திருப்பூரின் மாபெரும் சாதனை; மரம் வளர்ப்பு என்பது அறப்பண்பு. தமிழ்க் கலாச்சாரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பல்லுயிர் ஓம்புதலும் சிறப்பாக இருந்துள்ளது.
''தனிமனித ஒழுக்கமும், கட்டுப்பாடும், தார்மீக பொறுப்புகள் தான், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கை கொடுக்கும். ஒவ்வொரு நபரும், தமக்கான கடமை, பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
''வழக்கமாக, 'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' என்ற பெயர் பலகை மட்டும் இருக்கும்; மரம் இருக்காது. அந்நிலையை மாற்றி, வெறும் சொல்லாக இல்லாமல், செயலாக சாதனை படைக்கப்பட்டுள்ளது'' என்றார்.