கோவை:ஒடிசா ரயில் விபத்தில் பலியான சொந்தங்களுக்கு, தீபாஞ்சலி செலுத்தும் வகையில் கோவையில் நேற்று 'தினமலர்' சார்பில் நடந்த நிகழ்வுகளில், ஏராளமானோர் இதய அஞ்சலி செலுத்தினர். காயமுற்றோர் விரைந்து குணமடைய பிரார்த்தனையும் செய்தனர்.
ரயில் விபத்து தொடர்பான படங்களும், செய்திகளும், காண்பவர், கேட்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் உள்ளன. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி, காயமுற்றோர் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்யும் நிகழ்வு, 'தினமலர்' சார்பில் கோவையில் நேற்று நடந்தது.
வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த நிகழ்வில், அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி இதய அஞ்சலி செலுத்தினர். ஒரு நிமிடம் மவுனம் அனுசரித்து பிரார்த்தனை செய்தனர்.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கவுன்சிலர் சுமா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் செந்தில் அண்ணா, பாரதிதாசன், விஜய் பார்க் இன் ஹோட்டல் உரிமையாளர் கோவை ரமேஷ், ரோட்டரி கிரீன் சிட்டி தலைவர் சுரேஷ் குமார், கிரில் அசோசியேசன் தலைவர் ரவி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், சி4டிஎன் அமைப்பின் மணியன், பாரதமாதா நற்பணி அறக்கட்டளை தலைவர் கவுரி சங்கர், புத்தக வியாபாரிகள் சங்க செயலாளர் காளியப்பன், கோவை கோல்டுஸ்மித் சங்க தலைவர் கமலஹாசன், ரோட்டரி சங்க நிர்வாகி ஸ்ரீனிவாசன், கோவை மளிகை வியாபாரிகள் சங்க நிர்வாகி கணேசன் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''இந்த துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம் அனைவரது அஞ்சலி ஒன்றே ஆறுதலாக அமையும். காயமுற்றவர்கள் விரைந்து குணம் பெற இறைவனை பிரார்த்தனை செய்வோம்,'' என்றார்.
ஒடிசா ரயில் விபத்து யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, இறைவன் அருள் புரிய வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடக்க கூடாது.
-- கஸ்துாரி, 72, சித்தாபுதுார்
ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்திருக்க கூடாத ஒரு சம்பவம். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த உயிரிழப்பு மிகவும் வருத்தத்துக்குரியது.இதுபோல் இனிமேல் நடக்காத வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - கங்காதரன், 76, ஒண்டிபுதுார்
இத்துயர சம்பவம் இனி நடக்க கூடாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
- தண்டபாணி, 59, ஹோப் காலேஜ்
ரயில் நிலையத்தில் அஞ்சலி
முன்னதாக, நேற்று மதியம் கோவை ரயில் நிலையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 'தினமலர்' நாளிதழ் மற்றும் தெற்கு ரயில்வே இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் பவன் குமார் வர்மா, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஸ்ரீதரன், ரயில்வே அலுவலர் கள், ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், பயணிகள், பொது மக் கள் என ஏராளமானோர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.