கள்ளக்குறிச்சி-'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை பெருவங்கூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கியது.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவர்களுக்கு போதுமான கழிவறை வசதி இல்லாமலும், சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பாற்ற நிலையிலும் இயங்கி வந்தது.
இந்த பள்ளியில் தண்டலை, பெருவங்கூர், பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஏரிக்கரையை கழிவறையாக பயன்படுத்தும் அவலம் இருந்து வருகிறது. அத்துடன் ஏரிக்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள பள்ளியின் அருகாமை வரை ஏரி நீர் சூழ்ந்து வருகிறது.
மணிமுக்தா அணையில் இருந்து அடிக்கடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், மழைக்காலம் முடிந்துவிட்ட நிலையிலும் ஏரி உபரி நீர் பள்ளி அருகே சூழ்ந்து வருகிறது.
எனவே, மாணவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு போதிய கழிவறை வசதி மற்றும் உயரமான சுற்றுச்சுவர் அமைத்து பள்ளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கையால், பள்ளி பாதுகாப்பு கருதி ஏரிக்கரை பகுதியில் சுற்றுச்சவர் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.