கள்ளக்குறிச்சி,-கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அடுத்த வெள்ளப்பனேரியைச் சேர்ந்தவர் விஜயராஜ் மகன் தங்கராஜ், 26; தனியார் சொகுசு பஸ் டிரைவர். இவர், சென்னையில் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்துார் நோக்கிச் சென்றார்.
நேற்று அதிகாலை 3:15 மணியளவில் கள்ளக் குறிச்சி புறவழிச்சாலையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், கோமுகி ஆறு மேம்பால தடுப்புக் கட்டையின் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், ஊட்டி, குன்னுார் ராஜா, 50; இவரது மகள் ரம்யா,18; திருவண்ணாமலை தினகரன், 28; சென்னை நடராஜன் மனைவி ராஜம்மாள், 67; குமார் மனைவி நிர்மலாதேவி, 50; உட்பட 8 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, சேலம் - சென்னை மார்க்கமாக சென்ற அனைத்து வாகனங்களும் கள்ளக்குறிச்சி நகர் பகுதி வழியாக மாற்றி இயக்கப்பட்டது.
பின், 2 கிரேன்கள் மூலம் பஸ் அகற்றப்பட்டதையொட்டி, காலை 6:30 மணியளவில் புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டது.