லோடுமேன் பலி
திருமங்கலம்: பள்ளக்காபட்டியைச் சேர்ந்தவர் லோடுமேன் சிலம்பரசன் 24. இரண்டு நாட்களுக்கு முன்பு டூவீலரில் திருமங்கலத்தில் இருந்து ஊருக்கு சென்றார். சோழவந்தான் ரோட்டில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
36 பவுன் திருட்டு
மதுரை: சின்னகடை வீதி எழுத்தாணிகார தெரு ஓய்வு பேராசிரியர் சுப்ரமணியன். இவரது மனைவி மீனாம்பிகை 54. இருவரும் வெளியூர் சென்றுவிட்டு 2 நாட்களுக்குப்பின் வீடு திரும்பினர். பீரோவில் வைத்திருந்த 36 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிவந்தது. தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேன் மோதி பலி
மதுரை: கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமதாஸ் 62. தெற்குவெளி வீதி தவிட்டுச்சந்தை அருகே சைக்கிளில் சென்றார். அந்த வழியாக வந்த வந்த வேன் அவர் மீது மோதி காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தண்ணீரில் மூழ்கி பலியா
மதுரை: ஆனையூர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் 48. இவருக்கு வலிப்பு நோய் உள்ளது. சம்பவத்தன்று ஆனையூர் கோசாகுளம் கண்மாயில் இறந்துகிடந்தார். இவரது தந்தை செல்லையா கூடல்புதுார் போலீசில் புகார் செய்தார். குளிக்க சென்ற போது வலிப்பு நோய் வந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு வீரர் தற்கொலை
திருமங்கலம்: விடத்தகுளத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் தினேஷ் குமார் 25, திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கபடி வீரரான இவருக்கு கடந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் வீட்டிலேயே இருந்துள்ளார். குணமாகாததால் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.---------
கொத்தனார் தற்கொலை
திருமங்கலம் : மைக்குடியை சேர்ந்த பூமாரி மகன் ஊத்து கருப்பு பாலா 24, கொத்தனாரான இவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். -----------
இலங்கை பெண் அகதிகள் மாயம்
திருமங்கலம் : கூத்தியார்குண்டு அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ராஜன். இவருக்கு ஐந்து மகள்கள் உள்ளனர். இதில் 4 பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகள் லாவண்யா திருநகர் மொபைல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ராஜனின் தம்பி ராஜுவின் மகள் மதுஷா 22, இவரும் பெரியப்பா வீட்டில் தங்கி திருநகரில் லாவண்யா பணியாற்றும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர்கள், வீடு திரும்பவில்லை. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பைக் ரேஸ்: 8 பேர் கைது
மதுரை: தல்லாகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் இளைஞர்கள் சிலர் மக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் சென்றனர். தல்லாகுளம் போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ., ஆதிகுந்தகண்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை பிடித்தனர். அவர்களில் கிருஷ்ணாபுரம் காலனி தரனேஷ் 20, வாடிப்பட்டி ஜெமினிப்பட்டி அபினேஷ் 18, வில்லாபுரம் அச்சுதன் உட்பட 8 பேரை கைது செய்தனர்.