திருமங்கலம் : திருமங்கலம் அருகே கப்பலுார் டோல்கேட்டில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாததால் நீண்ட துாரம் பயணம் செய்து வரும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கட்டணம் செலுத்தி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் திருமங்கலம் கப்பலுார் டோல்கேட்டில் கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர்.
இந்த டோல்கேட்டில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் நீண்ட நாட்களாக பூட்டியே கிடந்தது. இதனால் முழுவதும் சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
அதேபோல் வாகன ஓட்டிகளுக்கான குடிநீர் வசதி டோல்கேட் அலுவலகத்தில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் வருவோர் இறங்கி ரோட்டை கடந்து அலுவலகத்தில் உள்ள தண்ணீரை பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் அதனை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
நெடுஞ்சாலையை பயன்படுத்துவதற்கு நூற்றுக்கணக்கில் கட்டணம் செலுத்தியும், போதிய கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.