கூடலுார் : முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 118.45 அடியாக உள்ள நிலையில் தமிழக விவசாயிகள் சாகுபடிக்காக அணையில் தண்ணீர் திறந்து விட்ட போதிலும், தென் மேற்கு பருவ மழையை எதிர்பார்த்து நெல் நாற்றங்கால் அமைக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். அணையில் நீர் இருப்பை பொறுத்து திறக்கும் தேதி மாறுபடும். நீர்மட்டம் 112 அடிக்கு மேல் இருந்தால் சாகுபடிக்கு நாற்றங்கால் வளர்க்க தண்ணீர் திறக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. இந்தாண்டு 118.45 அடியாக இருந்ததால் ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
எதிர்பார்ப்பு
தென்மேற்கு பருவமழை பெய்து நீர்மட்டம் வெகுவாக உயரும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் இதுவரை தென்மேற்கு பருவ மழைக்கான அறிகுறியே இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக அணையில் ஜூன் 1ல் தண்ணீர் திறக்கும் போது நீர்மட்டம் 130 அடிக்கும் மேல் இருந்தது. இதனால் இருபோக நெல் சாகுபடியையும் முழுமையாக செய்ய முடிந்தது.
தயக்கம்
இந்நிலையில் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட போதிலும் தென் மேற்கு பருவமழை தீவிரமடையாததால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் நாற்றுகள் வளர்ப்பதற்கான நாற்றங்கால் அமைப்பதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அணை நீர்மட்டம் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 118.45 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 194 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 200 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 2348 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியது.