குளித்தலை: பானிபூரி தள்ளுவண்டி மீது, சரக்கு வாகனம் மோதியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.
குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரி, 32. இவர், காவேரி நகர் நகர கூட்டுறவு வங்கி அருகில் பாணி பூரி தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார். கடந்த மே, 31 இரவு, 9:00 மணியளவில் கடையில் இருந்த போது, காவிரி நகரை சேர்ந்த பாலாஜி, 19, அக்ரஹாரத்தை சேர்ந்த சிவக்குமார், 57, திருச்சி மாவட்டம், கல்லணை கிளிக்கூடு கவுசல்யா, 22 ஆகிய மூன்று பேர் தனித்தனியாக தங்களது ஸ்கூட்டி மொபட்டில் வந்து, வாகனத்தை நிறுத்தி வைத்து பானி பூரி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, கரூர்- திருச்சி நெடுஞ்சாலையில் காவிரி நகரிலிருந்து உழவர் சந்தை நோக்கி வந்த அசோக்லேலண்ட் தோஸ்த் சரக்கு வாகனம், அதிவேகமாக வந்து பானிபூரி தள்ளு வண்டி கடையின் மோதியது. அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த மூன்று பேர் மற்றும் கடை நடத்துபவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
மேலும் அருகில் நிறுத்தி வைத்திருந்த மூன்று ஸ்கூட்டி மொபட்களும் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட நான்கு பேரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இது குறித்து, மோகனசுந்தரி கொடுத்த புகார்படி, அசோக் லேலண்ட் தோஸ்த் சரக்கு வாகன டிரைவர் கள்ளை பஞ்., சுக்காம்பட்டியை சேர்ந்த சதீஷ், 21 என்பவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.