கரூர்: கரூர் மனோகரா கார்னரில், நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், ரவுண்டானாவை சுற்றி, தரமற்ற சிமென்ட் கலவை போடப்பட்டுள்ளது. இதனால், சாலையில் சிதறிய ஜல்லி கற்களில் சறுக்கி, வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது.
கரூர் மாநகராட்சி பகுதிகளான மனோகரா கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், நீரூற்று அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. அதில் மனோகரா கார்னரில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலையை சுற்றி, 13.20 லட்சம் ரூபாய் செலவில் நீரூற்று அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அதற்காக, ரவுண்டானாவின் அகலம் குறைக்கப்பட்டு, புதியதாக கான்கிரீட் அமைக்கப்பட்டது.
ஆனால், அகலம் குறைக்கப்பட்ட இடத்தில் சாலை மேடும், பள்ளமாக இருந்தது. தற்போது மணல் திட்டுக்களும் அகற்றப்பட்டு, மனோகரா கார்னர் ரவுண்டானா சுற்றி, தரமற்ற சிமென்ட் கலவை போடப்பட்டது. இந்
நிலையில் கடந்த, 3ல் கரூரில் பெய்த மழை காரணமாக, சிமென்ட் மழையில் கரைந்து விட்டது. தற்போது, ஜல்லிக்கற்கள் மனோகரா கார்னரை சுற்றி, சிதறி கிடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். எனவே, ரவுண்டானாவை சுற்றி, உடனடியாக தரமான, தார்ச்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.