குளித்தலை: குளித்தலை அடுத்த, கல்லடையை சேர்ந்தவர் மருதை மகன் மோகன்ராஜ், 27. இவர் கொத்தனாராக இருந்தார். கடந்த, 3ல், வேலைக்கு சென்று விட்டு, வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில், இவருடைய நண்பர்கள் ஆம்னி காருக்கு பெட்ரோல் இல்லை என்று மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு, பெட்ரோல் வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.
அப்போது, வீட்டில் இருந்து வெளியே செல்வதை கண்ட அவரது மனைவி எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டார். நண்பர்களுக்கு பெட்ரோல் வாங்கி கொடுக்க செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால், அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அதிகாலை திருச்சி தோகைமலை நெடுஞ்சாலை கல்லடை வளைவு சாலையோரமாக, உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்தார். தோகைமலை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் மனைவி கோமதி கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருச்சி மாவட்டம், தாயனுார் பஞ்., கீரிக்கல்மேடு கிராமத்தை சேர்ந்த கொத்தனார்கள் கலையரசன், 19, இவருடைய நண்பன் நச்சலுார் டிரைவர் ஜீவா, 20 மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், பணம், கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டதில் மோகன்ராஜை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட மூவரும், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இருவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறுவனை சீர்த்திருத்தப்பள்ளி சிறையில் அடைத்தனர்.