பைக் மீது ஆட்டோ
மோதி வாலிபர் படுகாயம்
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பரிசல்துறை ரோட்டை சேர்ந்தவர் முகில்
அரசன், 32. கடந்த, 1 காலை, 10:00 மணியளவில் ஹீரோ ஹோண்டா பைக்கில், கோட்டையார் தோட்டத்திலிருந்து தன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலை நெடுஞ்சாலையில், ஏவுரி அம்மன் கோவில் அருகே இனுங்கூர் நோக்கி வந்த ஆட்டோ, பைக் மீது மோதியது.
இதில் முகில் அரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு பெட்டவாய்த்தலை தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து முகில் அரசனின் தந்தை ஜெயராஜ், 65 கொடுத்த புகார்படி, ஆட்டோ டிரைவர் பெட்டவாய்த்தலை காமராஜ் நகரை சேர்ந்த ராஜவேல், 30 மீது குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முனியப்பசுவாமி
கோவில் திருவிழா
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரம் முனியப்ப சுவாமி கோவிலில், வைகாசி திருவிழா நேற்று முன்தினம், காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் ஊர்வலத்துடன் தொடங்கியது. பிறகு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மஹா தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, முனியப்பசாமி கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏந்தி சுவாமியை வழிபட்டனர்.
நேற்று காலை, கோவில் கிடா வெட்டப்பட்டு, படையல் பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, மாலை வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
மீன்கள் விலை உயர்வு
மாயனுாரில், மீன் வரத்து குறைவு காரணமாக அதன் விலை உயர்ந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு காரணமாக, மீன்கள் வரத்து சரிந்தது. காவிரி ஆற்றில், மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். நேற்று குறைந்த மீன்கள் மட்டும் கிடைத்தது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் ஜிலேப்பி மீன்கள் கிலோ, 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஜிலேப்பி மீன்கள் கிலோ, 150 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கெண்டை கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. லாலாப்பேட்டை, மகாதானபுரம், புலியூர், சேங்கல், குளித்தலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் மீன்களை வாங்கி சென்றனர்.
கரூரில் விழிப்புணர்வு முகாம்
கரூர் மாநகராட்சி, ஒன்பதாவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கவுன்சிலர் ஸ்டீபன்பாபு தலைமை வகித்தார். சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவும், துாய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். மட்கும் குப்பை, மட்காத குப்பை, அபாயகரமான குப்பை என, தரம் பிரித்து வழங்க வேண்டும். கரூரை சுகாதாரமான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆய்வாளர் பிரபாகரன், பொறியாளர் மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
நடந்து சென்றவர் மீது பைக்
மோதி தொழிலாளி பலி
குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., கீழ தண்ணீர் பள்ளியை சேர்ந்தவர் ரத்தினம், 60. கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 3 இரவு, 7:00 மணியளவில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலை பட்டவர்த்தி பஸ் ஸ்டாப்பில் இருந்து, வீட்டுக்கு செல்வதற்காக நெடுஞ்சாலையை நடந்தபடி கடந்தார். அப்போது, பெட்டவாத்தலையில் இருந்து குளித்தலை நோக்கி சென்ற டி.வி.எஸ்., அப்பாச்சி பைக், அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து ரத்தினத்தின் மகன் கதிர்வேல், 40 கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.
மானியத்தில் பவர் டில்லர்
விண்ணப்பிக்க அழைப்பு
தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில், பவர் டில்லர் மானிய விலையில் பெறுவதற்கு வேளாண் பொறியியல் துறையை அணுகலாம், என கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில் பவர் டில்லரை மானியத்தில் வாங்கலாம். இதில் பவர் டில்லர் வாங்குவதற்கு சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில், 50 சதவீதம் மற்றும் இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில், 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு,குறு விவசாயிகளுக்கு கூடுதலாக, 20 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, கரூர் உதவி செயற்பொறியாளர் மொபைல், 94435 67583, குளித்தலை உதவி செயற்பொறியாளர் மொபைல் எண், 98424 70358 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, மயான நிலத்தை சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சிவன் கோவில் அருகில் வாய்க்கால் கரையில் மயானம் உள்ளது. இந்த இடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு நிலம் தனி நபர் வசம் இருந்தது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட்டது. டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யுவராணி, வார்டு கவுன்சிலர்கள் சசிக்குமார், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கால்வாய் கழிவுநீர் தேக்கம்
தொற்று பரவும் அபாயம்
கால்வாய் துார் வாரப்படாததால், கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
கரூர் மாவட்டம், கொளந்தானுார் சுற்றியுள்ள பகுதியில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் பல ஆண்டுகளாக முறையாக சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இங்குள்ள சாக்கடை கால்வாய் துார்ந்து போய் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.
தற்போது, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோடை மழை பெய்து வருகிறது. அந்த மழைநீரும், கழிவு நீருடன் சேர்ந்து பல இடங்களில் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர். எனவே, கழிவுநீர் செல்ல
வசதியாக சாக்கடை கால்வாய் கட்ட வேண்டும்' என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுர்ணமியை முன்னிட்டு அங்காள
பரமேஸ்வரி கோவிலில் அபிஷேகம்
கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
வேலாயுதம்பாளையம் அருகே, தளவாபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், விபூதி, மஞ்சள், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பஸ் மீது கிரேன் மோதி
2 பெண்கள் படுகாயம்
குமாரபாளையத்தில், தனியார் பஸ் மீது கிரேன் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம் அருகே, சேலம்-கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு, தனியார் கல்லுாரி எதிரே, சேலத்திலிருந்து, பவானி நோக்கி, நேற்று முன்தினம் இரவு, 8:10 மணிக்கு, தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கல்லுாரி பக்கமிருந்து சாலையை கடக்க முயன்ற கிரேன், பஸ் கண்ணாடி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பஸ்சில் பயணம் செய்த தாரணி, 29, தேவி, 29, என, இரு பெண்கள் பலத்த காயமடைந்தனர். கிரேன் டிரைவர், ஆனங்கூர் சாலை பெரியார் நகரில் வசிக்கும் குமார், 49, தலைமறைவானார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டு வசதிப்பிரிவு கோரிக்கை
மனுக்கள்; கலெக்டர் அழைப்பு
கரூர் கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக, பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர். அதன் தொடர்ச்சியாக, திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் திருச்சி, கரூர், அரியலுார், பெரம்பலுார் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே, அலுவலக வேலை நாட்களில் வீட்டு வசதி தொடர்பான மனுக்களை, பொது மக்கள் அளித்து அரசிடமிருந்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
இரும்பு ராடுகளை திருடிய
மூன்று வாலிபர்கள் கைது
வேலாயுதம்பாளையம் அருகே, இரும்பு ராடுகளை திருடியதாக, மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புகழூர் அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 54; இவர், வேலாயுதம்பாளையம் அருகே, மசக்கவுண்டன்புதுார் பகுதியில், இரும்பு பட்டரை நடத்தி வருகிறார். கடந்த, 27ல் அங்கு வைக்கப்பட்டிருந்த, 70 கிலோ இரும்பு ராடுகளை காணவில்லை. இதுகுறித்து, முருகேசன் அளித்த புகார்படி புகழூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த், 22, ரஹ்மான், 22, சுகந்தன், 21 ஆகிய மூன்று பேரை, வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.