கூடுதல் விளக்குகள்
அமைக்க எதிர்பார்ப்பு
கரூர்-ஈரோடு சாலை கோதை நகர், மருத்துவ நகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், அந்த பகுதிகளில் போதிய தெரு விளக்கு வசதிகள் இல்லை. தற்போது, அதிகளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், விளக்குகள் இல்லாத நிலையில், இரவு நேரத்தில் கிராம மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால், கோதை நகர், மருத்துவ நகரில் அதிகளவில் மின் கம்பங்களை அமைத்து, கூடுதலாக விளக்குகளை பொருத்த, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல மாதங்களாக எரியாத விளக்குகளை, உடனடியாக மாற்ற வேண்டும்.
போக்குவரத்து போலீசாரை
பணியமர்த்த வேண்டும்
கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் சாலையில், நாள்தோறும் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மேலும், டூவீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. பொது மக்களால், சாலையை கடந்து, நடந்து கூட செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில், தானியங்கி சிக்னல் அமைத்து, நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்டெக்ஸ் தொட்டியை
மாற்ற நடவடிக்கை தேவை
கரூர்-வாங்கல் சாலை அரசு காலனியில், நுாற்றுக்கும் மேற்பட்ட
வீடுகள் உள்ளன. இதனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, சில
ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதம் அடைந்துள்ளது. இதனால், பொது மக்களால் தண்ணீர் பிடிக்க முடியவில்லை. மேலும், போர்வெல் குழாயில், தண்ணீர் வர நீண்ட நேரமாகிறது. மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை
சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்க வேண்டும் என,
அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.