பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், காடச்சநல்லுார் பகுதியில் பழமையான அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளி காற்றில் காடச்சநல்லுார் பகுதியிலிருந்த பழமையான அரசமரம் ஒன்று, அருகிலிருந்த ஓட்டு வீட்டின் மீது சாய்ந்தது. இதனால் வீட்டுச்சுவர் லேசான விரிசல் ஏற்பட்டது. மேலும், விளாங்காட்டூர், காடச்சநல்லுார் உள்ளிட்ட பகுதியில் மின் கம்பமும் சாய்ந்தது. நேற்று, காடச்சநல்லுார் பஞ்., சார்பில் வேரோடு சாயந்த அரசமரத்தை அகற்றினர். மின் பணியாளர்கள், சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்தடையால் அவதிப்பட்டனர்.
* இதேபோல், குமாரபாளையத்திலும் சூறாவளி காற்றுடன், 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில், காவேரி நகர், பள்ளிபாளையம் சாலை, ஆனங்கூர் சாலை, சேலம் சாலை, பெராந்தர்காடு, கிழக்கு காலனி, நாராயணநகர் உள்ளிட்ட பல இடங்களில், 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. பஸ் ஸ்டாண்ட் அருகே கோம்பு பள்ளத்தில் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆறுபோல் பாய்ந்தோடியது.