ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பாலப்பாளையத்தை சேர்ந்த அமெரிக்கா விஞ்ஞானி தனது வீட்டை படிப்பகமாக மாற்றி அசத்தியுள்ளார்.
ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் கிராமத்தை சார்ந்தவர் விஞ்ஞானி வெங்கட்மணி, 70; அமெரிக்காவில் வேதியியல் துறை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது பள்ளி படிப்பை குருசாமிபாளையம் செங்குந்தர் பள்ளியில் முடித்துள்ளார். இவரது குடும்பத்தினர் அனைவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால், தான் பிறந்து வளர்ந்த பாலப்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டை, 35 லட்சம் ரூபாய் செலவில், சுற்றுப்புற பள்ளி கல்லுாரி மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில், படிப்பகமாக கட்டி மாணவர்களுக்காக அர்ப்பணித்துள்ளார்.
இந்த படிப்பகத்தில், மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்யவும், ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளவும், நேர்முக தேர்வுகளுக்கு பயிற்சி பெறவும் மற்ற பிற பாடங்களை கற்றுக்கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. சேலம் எஸ்.பி., சிவக்குமார் கலந்து கொண்டு படிப்பகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''பல புகார்கள் என்னிடம் வந்துள்ளன. ஆனால், இதுவரை படித்த கல்வி போய்விட்டது என்ற புகார் வந்ததில்லை. எனவே, கல்வி என்றும், எப்போதும் நிரந்தரம்,'' என்றார்.
முன்னாள் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.