ப.வேலுாரில் மின்தடை ரத்து
ப.வேலுார் பகுதியில் மின் பராமரிப்பு பணிக்காக, நாளை (6ம் தேதி) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிர்வாக காரணங்களுக்காக ரத்து
செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: மின்வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, பரமத்தி வேலுார் துணை மின் நிலையத்திலிருந்து மின் பராமரிப்பு பணிக்காக, நாளை (6ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்தும், தற்போது வெயில் தாக்கம் அதிகமிருப்பதால் பொதுமக்கள் நலன் கருதி மின்தடை ரத்து செய்யப்படுகிறது. ப.வேலுார், பரமத்தி, நல்லியம்பாளையம், பொத்தனுார், சூரியம்பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் வழக்கம்போல் மின்
வினியோகம் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அடையாள அட்டை வழங்கல்
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட சாலையோர சிறுவியாபாரிகள் கணக்கெடுப்பு, நகராட்சி சார்பில் நடந்தது. அதன்படி கணக்கெடுக்கப்பட்ட, 169 சாலையோர சிறு வியாபாரிகளுக்கு நகராட்சி சார்பில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், ஜேம்ஸ், கனகலட்சுமி, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு ஓவிய போட்டி
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பள்ளிபாளையம் அருகே, பாப்பம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும், 'செங்கோ இயற்கை' பண்னை சார்பில், சுற்றுச்சூழலில் குழந்தைகளின் பங்கு என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, நேற்று அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, செங்கோ இயற்கை பண்னை தலைவர் நல்லசிவம் பரிசாக மரக்கன்று, பேனா, பென்சில் உள்ளிட்டவை வழங்கினார்.
வரதராஜூலு நாயுடு
136வது பிறந்தநாள் விழா
ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, விடுதலை போராட்ட வீரரும், பத்திரிகையாளருமான வரதராஜூலு நாயுடுவின், 136வது பிறந்தநாள் விழா, விடுதலைக்களம் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. வரதராஜூலு நாயுடுவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர். விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.
ராசிபுரம் மோகன் நாயுடு, சிட்டி வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாம்
சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில், முதல்வரின் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டத்தில், பேளுக்குறிச்சி வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள், உரிமையாளர்கள் நல சங்கம், சேலம் சண்முகா மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ
முகாம் நடத்தின. பள்ளி தலைமையாரியை சுமதி துவக்கி வைத்தார். இதில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஒட்டுக்குடல், குடலிறக்கம், கேன்சர் கட்டி, குழந்தையின்மைக்கான மருத்துவ ஆலோசனை, தைராய்டு கட்டி அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மார்பக கட்டி, பித்தப்பை, சிறுநீரக பாதை கற்கள் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தனர். பேளுக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
சரக்கு ஆட்டோவை திருடிய
மாமனார், மருமகன் கைது
மோகனுார் அடுத்த வளையப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ், 41; 'ஹாலோ பிரிக்ஸ்' தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த, 2ம் தேதி, இரவு, 8:00 மணிக்கு, நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை, 4:30 மணிக்கு, கடைக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, 'சிசிடிவி' ஒயர், ஹெட்போன் மற்றும் சரக்கு ஆட்டோ மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், எருமப்பட்டி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர், 37, அவரது மாமனார் குன்னிமரத்தான், 52, ஆகியோர், சரக்கு ஆட்டோவை திருடிச்சென்றது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.