காஷ்மீரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, ஸ்ரீசாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று கோலாகலமாக நடக்கிறது.
நம் நாட்டின், புண்ணியம் நிறைந்த ஆன்மிக ஸ்தலங்களில் முக்கியமானது, காஷ்மீர் சாரதா பீடம்; இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாக்., எல்லைக்குள் சென்றுவிட்டது.
நீலம் நதிக்கரையில், ஸ்ரீநகரில் இருந்து, 130 கி.மீ., துாரத்தில், 'சாரதா' கிராமத்தில், 1981 மீட்டர் உயரத்தில், காஷ்மீர் மக்களால், சிவனின் வசிப்பிடமாக கருதப்படும் 'ஹர்முக்' பள்ளத்தாக்கில் இது அமைந்துள்ளது. நம் நாட்டு பக்தர்கள் அங்கு சென்று வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு காலத்தில், சர்வ கலாசாலையாகவும் திகழ்ந்த, பல மகான்களும் தங்கி வழிபட்ட மையம், தற்போது, சிதிலமாகி, ஒரு சுவர் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
மூன்றாவது புனித பூமி
காஷ்மீர் ஹிந்துக்கள், கீர்பவானி கோவில், வைஷ்ணவி தேவி ஆகிய இரண்டு சக்திபீடங்கள் தவிர, இதை முதல் சக்திபீடமாக கொண்டாடினர். மார்த்தாண்ட சூரியனார் கோவில், அமர்நாத் குகை ஆகியவற்றுடன் சேர்த்து, இதை மூன்றாவது புனித பூமியாக போற்றுகின்றனர். இப்பீடத்தில் வீற்றிருக்கும் தேவியை, கல்வியின் அதிபதியான சாரதா; ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி; சொற்களின் சொரூபமாகிய வாக்தேவி எனும் முப்பெரும் தேவியர்களாக வழிபட்டு வந்தனர்.
ஸ்ரீசாரதாம்பாள் கோவில் திருப்பணி
ஹிந்து மக்கள், சாரதாதேவி பீடத்தில் வழிபாடு நடத்த முடியாத நிலையை மாற்றிட, புதிய கோவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பழைய சாரதா பீடத்துக்கு, 10 கி.மீ., அருகில், இந்திய எல்லையில் உள்ள, 'டீட்வால்' எனும் கிராமத்தில், 1948 வரை செயல்பட்டு வந்த தர்மசாலா இடத்தில் கோவில் அமைந்துள்ளது. புதிய கோவில் கட்டுவதற்காக, 3,500 சதுரடி பரப்பில் 2021 டிச., 2ம் தேதி 'சேவ் சாரதா கமிட்டி' அமைப்பினரால் அடிக்கல் நாட்டி, கோவில் திருப்பணி நடந்தது.
புதிய கோவில் அமைப்பு
புராதன கோவிலின் வடிவமைப்பிலேயே, ஆதிசங்கரர் நிறுவிய நான்கு ஆம்னாய பீடங்களை குறிக்கும் வகையில், நான்கு நுழைவாயில்களுடன், நடுவில், ஸ்ரீசாரதாம்பாளின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ஹிந்துக்களால் புண்ணிய தலமாக போற்றி வணங்கப்பட்ட, புராதனமான ஸ்ரீசாராதா தேவி பீடம் போலவே, புதிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டிய சிருங்கேரி பீடம்
ஸ்ரீசாரதாம்பாள் கோவில் நிர்மாணத்திற்கு வழிகாட்டி, அருளாசி வழங்குமாறு, சிருங்கேரி பீடாதிபதிகளிடம் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். அதன்படி, புதிய ஆலயத்தை சிருங்கேரி சமஸ்தானம் சார்பில் கட்டிக்கொடுப்பதாகவும், கோவிலில் ஸ்தாபனம் செய்ய, பஞ்சலோகத்தில் புதிய சாரதாம்பாள் விக்ரகத்தை அளிப்பதாகவும் பீடாதிபதிகள் ஆசி வழங்கியிருந்தனர்.
புதிய விக்ரகம் புறப்பாடு
காஷ்மீர் சர்வஞ்ஞ பீடத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலுக்கு, ஸ்ரீசாரதாம்பாள் பஞ்சலோக விக்ரகம், சிருங்கேரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. காஷ்மீர் சாரதா யாத்திரை ஆலய கமிட்டியின் ரவீந்திர பண்டிட் உட்பட, அனைத்து உறுப்பினர்களும், சிருங்கேரியில், விக்ரகத்தை பெற்றுக்கொண்டனர். முன்னதாக, பாரதீ தீர்த்த சுவாமிகள் விக்ரகத்துக்கு தீபாராதனை செய்து வழிபட்டார். ஸ்ரீசாரதாம்பாள் விக்ரகம், இந்தியா முழுவதும் அலங்கரித்த வாகனத்தில் யாத்திரை சென்றது.
இன்று கும்பாபிஷேகம்
ஸ்ரீசாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று (5ம் தேதி) நடக்கிறது. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம், காலை, 9:00 மணிக்கு, கும்பாபிஷேக பூஜைகளை நிகழ்த்தி வைக்கிறார். முன்னதாக, பிரதிஷ்டை செய்யப்படும், ஸ்ரீசாரதாம்பாள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, வழிபாடு இல்லாமல் சிதிலமடைந்த ஸ்ரீசாரதா கோவில், தற்போது இந்திய எல்லைக்குள், புண்ணிய பூமியில் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள், மீண்டும் காஷ்மீர் ஸ்ரீசாரதாதேவியை வழிபடும் பாக்கியம் கிடைக்கும்; ஸ்ரீசாரதாம்பாளின் அருளாட்சி நாட்டுக்கே நல்வழியை காட்டுமென, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கும்பாபிஷேக நிகழ்ச்சியை காலை 9:00 மணி முதல் நேரலையில் காண -https://www.youtube.com/@shara dapeetham/streams
காஷ்மீருக்கும், சிருங்கேரிக்கும், புராணகாலத்தில் இருந்தே ஆன்மிக தொடர்பு உண்டு; சிருங்கேரி மஹா சுவாமிகளுக்கும், காஷ்மீர் அரசர்களுக்கும், குரு - சிஷ்ய சம்பந்தம் இருந்துள்ளது. கடந்த 1919ல், காஷ்மீரை ஆண்டுவந்த பிரதாபசிம்ஹ மகாராஜா, சிருங்கேரி சாரதா பீடத்தின், 34வது அதிபதியான ஸ்ரீசந்திரசேகர பாரதீ மகாசுவாமிக்கு எழுதிய கடிதங்களே பந்தத்தை பறைசாற்றுகிறது.சிருங்கேரி சாரதா பீடத்தின், 35வது பீடாதிபதி ஸ்ரீஅபினவ வித்யா தீர்த்த சுவாமி, 1967ல் காஷ்மீர் சென்று, சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடத்தி, காஷ்மீர் மக்களுக்கு அருளாசி வழங்கியிருக்கிறார்.
சிருங்கேரி - காஷ்மீர், ராமேஸ்வரம் -மகாராஷ்டிரா மாநில உறவுகள், சிருங்கேரி பீடத்தை சார்ந்தே இருக்கிறது.சிருங்கேரி மடாதிபதியிடம் சிவதீட்சை பெறும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அர்ச்சகர்கள் மட்டும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கர்ப்பகிரகத்துக்குள் பூஜை செய்ய முடியும் என்ற சம்பிரதாயம் தொன்று தொட்டு வருகிறது.தற்போதைய பீடாதிபதி, ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகள், அகிலபாரத தர்ம விஜய யாத்திரையின் ஓர் அங்கமாக, 1994ல் காஷ்மீர் சென்று, அருளாசி வழங்கினார். சங்கராச்சார்ய மலைக்கு சென்று சிறப்பு பூஜைகளும் செய்துள்ளார்.