தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 'சிந்தடிக்' ஓடுதளம் அமைக்க, மத்திய அரசு, 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், மூன்று ஆண்டுகளாக பணிகள் முடங்கியுள்ளன.
தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பராமரிப்பில், தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு, 400 மீட்டர் துாரத்திற்கு சிந்தடிக் ஓடுதளம் அமைக்க, மத்திய அரசு கடந்த, 2020ம் ஆண்டு, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இந்த பணியை செய்ய, மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்தது. சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணியை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், தொழில்நுட்ப வல்லுனர் குழு அவ்வப்போது ஆய்வு செய்து, ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்தது.
இதையடுத்து, மைதானத்தை சீரமைக்கும் பணி, 2020ல் துவங்கியது. சீரமைப்பு பணிக்காக மண் நிரப்பிய பிறகு, தமிழக அரசின் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணிகளை பார்வையிட்டு, அறிக்கை அளிக்கவில்லை.
மேலும், தமிழக அரசும் இதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து கேட்டு பெறவில்லை.
பின் ஆட்சி மாற்றத்தால், ஒப்பந்த நிறுவனத்திடம், தற்போதைய ஆளும்கட்சி தரப்பில் கமிஷன் எதிர்பார்த்து, சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி முடங்கியுள்ளது.
இதுகுறித்து தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர் ஆனந்த் கூறியதாவது:
எங்கள் நிறுவனம் சர்வதேச அளவிலான சிந்தடிக் டிராக், டென்னிஸ் கோர்ட் உள்ளிட்ட விளையாட்டு அரங்குகள் அமைக்கும் பணியை செய்து வருகிறது. இந்தியாவில் நாக்பூர், ராஜஸ்தான், ஹரியானா, கேரளா, மும்பை உள்ளிட்ட இடங்களில் சிந்தடிக் டிராக்கை அமைத்துள்ளோம்.
தஞ்சாவூரில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்க இதுவரை, 60 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஆனால், செலவு செய்த தொகையை விடுவிக்காமல், மாநில அரசு காலம் தாழ்த்தியது.
எங்கள் நிறுவனம் தொடர்ந்து வற்புறுத்தியதால் கடந்த ஏப்ரலில், 27 லட்சம் ரூபாயை மட்டும் மாநில அரசு வழங்கியது. இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை.
மேலும், பிரிட்டனில் ஆர்டர் கொடுத்த சிந்தடிக் ஓடுதளத்துக்கான மூலப் பொருட்கள், அங்கிருந்து வரவழைக்கப்படாமல் அங்கேயே கிடப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.