குரும்பக்காடு: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, குரும்பக்காடு பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.
மொத்தம் 120 வீடுகளை கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில், 'கஜா' புயலால் பாதித்தவர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 120 பயனாளிகளிடம் இருந்து தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை பெறப்பட்டது. வீடுகள் பூர்த்தியாகி, பயனாளிகளிடம் ஒப்படைக்கும் தருவாயில், மீண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என வாரிய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.
இதனால், அதிர்ச்சியடைந்த பயனாளிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பயனாளிகள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா-விடம் புகார் மனு அளித்தனர். உரிய விசாரணை செய்து, நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் கூறினார்.