புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக விநாயகர் சிலையை பார்வையிட வேண்டும் என ஹிந்து முன்னணியினர் அளித்த மனுவுக்கு, 'பொதுப் பணித் துறை மூலமாக பதில் அளிக்கப்படும்' என கலெக்டர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலக நுழைவாயில் பகுதியில் இருந்த விநாயகர் சிலையை, புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் மெர்சி ரம்யா அகற்றி விட்டதாகவும், அதன் ஒரு பகுதி உடைந்து விட்டதாகவும், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதை அறிந்த பா.ஜ.,வினர், மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தை, 3ம் தேதி முற்றுகையிட்டனர். 'விநாயகர் சிலை உடையவில்லை' என்று விளக்கம் அளித்த கலெக்டர், விநாயகர் சிலை இருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டார். தொடர்ந்து, முகாம் அலுவலக நுழைவாயிலில் இருந்து அகற்றப்பட்ட சிலை, முகாம் அலுவலக வளாகத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த ஹிந்து முன்னணியினர், விநாயகர் சிலை குறித்து கேட்டு நேற்று, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யாவிடம் மனு அளித்தனர். அதற்கு, 'பொதுப் பணித் துறை வாயிலாக, மனுவுக்கு பதில் அளிக்கப்படும்' என அவர்களிடம் பதில் அளித்த மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.