பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, டிராக்டர் மீது வேன் மோதியதில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, ஆம்னி பஸ் திடீரென மோதியதில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.
திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி, 60. இவர், தன் உறவினர்கள், 10 பேருடன், 'மேக்ஸி கேப்' வேனில், திண்டுக்கல்லிலிருந்து திருவண்ணாமலை சென்றார்.
அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் திண்டுக்கல் திரும்பிக்கொண்டிருந்தார். வேனை, திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்த செல்வராஜ், 55, என்பவர் ஓட்டினார்.
அந்த வேன் நேற்று அதிகாலை, 2:15 மணிக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலுார் மாவட்டம், செங்குணம் பிரிவு ரோடு அருகே வந்தது.
அப்போது, முன்னால் சென்ற டிராக்டரை முந்தும்போது, டிராக்டரில் வேன் மோதியது. இதில், 'மீடியனில்' வேன் ஏறி நின்றது; டிராக்டர் சாலையின் இடதுபுறம் கவிழ்ந்தது.
டிராக்டரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம், பொந்தமல்லியைச் சேர்ந்த கிழவன், 45, உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு பெரம்பலுார் ஆம்புலன்ஸ் வந்து, விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல முயன்றது.
அதன் டிரைவர் பெரம்பலுார் மாவட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், 45, ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது, சென்னையிலிருந்து, திருச்சி நோக்கி சென்ற ஸ்ரீ எஸ்.எம்.எஸ்., டிராவல்ஸ் என்ற ஆம்னி பஸ், திடீரென ஆம்புலன்சின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது.
இதில், ஆம்புலன்ஸ் வாகனம், 1 கி.மீ., தானாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன், வேனில் பயணம் செய்தவர்களான திண்டுக்கல் நாகல் நகர் பகுதியைச் குப்புசாமி, 60, அவரது பேத்தியான சுப்ரமணி மகள் கவிப்பிரியா, 22, ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
இந்த விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஆம்னி பஸ் டிரைவர் திருநெல்வேலியைச் சேர்ந்த சுடலை, 42, வேன் டிரைவர் செல்வராஜ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மறியல்: 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இதையறிந்து, மருத்து வமனை முன் திரண்ட அவரது குடும்பத்தினர் அவரது உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.