மயிலாடுதுறை: திருமண நிச்சயதார்த்த விழாவில், பாயசம் ருசியாக இல்லாததால் மணமகன், மணமகள் வீட்டார் அடிதடியில் இறங்கிய படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம், திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. விழா விருந்தின் போது, பாயசம் பரிமாறப்பட்டது.
பாயசம் ருசியாக இல்லாததால், வேறு பாயசம் தயாரித்து வழங்க மணமகள் வீட்டார் கேட்டனர்; மணமகன் வீட்டார் மறுத்தனர். இதனால், இரு வீட்டாருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது பரிமாறப்பட்ட சாம்பார், பெண் வீட்டார் மீது சிறிது பட்டது.
இதையடுத்து இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறு, மோதலாக வெடித்தது. மண்டபத்தில் இருந்த டேபிள், சேர்கள் தள்ளி விடப்பட்டன. திருமண மண்டபத்திற்கு வெளியே இரு தரப்பினர் மோதிக் கொண்டனர்.
தகவலறிந்து வந்த சீர்காழி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.
நிச்சயதார்த்த விழாவில் பாயசம் ருசியாக இல்லாததால், மணமகன், மணமகள் வீட்டார் மோதிக்கொண்டது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.