திருநெல்வேலி: தேனி மாவட்டம், மேகமலையில் பலரையும் தாக்கி வந்த அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை, நேற்று முன்தினம் நள்ளிரவு துப்பாக்கி மூலம் இரண்டு 'டோஸ்' மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டது. லாரியில் ஏற்றி முண்டந்துறை வனத்தில், குமரி மாவட்டம் அருகே விட்டனர்.
மிக நீண்ட போராட்டத்திற்கு பின், தேனி மாவட்டம், மேகமலையில் பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானை, அங்கிருந்து வனத்துறை வாகனம் மூலம் திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டது.
களக்காடு முண்டந்துறை சரணாலய பகுதியான மணிமுத்தாறு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.
மாலை 5:30 மணிக்கு மாஞ்சோலை எஸ்டேட், களக்காடு முண்டந்துறை பகுதியை கடந்து, அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் கோதையார், முத்துக்குளிவயல் பகுதியில் யானையை இரவில் விட்டனர்.
இங்கிருந்து கேரள வனப்பகுதி 23 கி.மீ., தான். மேலும் இப்பகுதி புல்வெளி நிறைந்த யானைகளின் வசிப்பிடமாகும்.அங்கு நிறைய யானைகள் உள்ளன. எனவே யானை மீண்டும் மக்கள் வசிப்பிடங்களுக்கு வராது என வனத்துறையினர் கூறினர்.
தமிழக வனத்துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாகு, மே 3ல் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, கோதையார் பகுதிகளை சுற்றி பார்த்தார். அப்போதே யானையை இங்கு விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
பலரை கொன்ற அந்த யானையை திருநெல்வேலி வனப்பகுதியில் விட எதிர்ப்பு தெரிவித்து, மணிமுத்தாறு, பாபநாசம் பகுதியில் நேற்று போராட்டங்கள் நடந்தன. மணிமுத்தாறில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசத்திலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் யானை இப்பகுதியை கடந்து கேரள பகுதியை ஒட்டிய குமரி வனத்தில் விடப்பட்டது.
தமிழக அரசு தகவல்
முன்னதாக, 'ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் காட்டு யானை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்படும்' என, தமிழக அரசு தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், கம்பம் ஓய்வு பெற்ற பேராசிரியர் கோபால் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன், தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:
ஸ்ரீவில்லிபுத்துார், மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு அரிசி கொம்பன் பிடிபட்டது. உடல்நிலை சரியான பின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டது.
கேரளா இடுக்கி மாவட்டம் சின்ன கானல் பகுதியில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் யானையை அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிடித்து, கடந்த ஏப்.30 ல் பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட்டனர்.மே 27ல் தமிழக வனப்பகுதியான மாவடி, வண்ணாத்தி பாறை பகுதிகளுக்கு வந்து, பின் மீண்டும் கேரள வனப்பகுதிக்கு திரும்பியது.மறுநாளே மேகமலை பகுதிக்கு வந்து ஹைவேவிஸ், மணலாறு, இரவங்கலாறில் சுற்றி திரிந்தது. பின் அங்கிருந்து வெளியேறி, மீண்டும் தேக்கடி வனப்பகுதிக்கு சென்றது. பின் குமுளி ரோஜாப்பூ கண்டம் பகுதிக்கு வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. கேரள வனத்துறையினர் அன்றிரவு வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கி சத்தத்தை கேட்ட அரிசி கொம்பன், லோயர்கேம்ப் வழியாக கம்பம் நகருக்குள் மே 27ல் நுழைந்தது. முதியவர் ஒருவரை கீழே தள்ளியதில் அவர் பலியானார்.