இயற்கை குறுமிளகு
வெளிநாடு ஏற்றுமதி
நீலகிரி மாவட்டம் கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலை, காபிக்கு அடுத்தபடியாக, ஊடுபயிராக, 2,321 ஏக்கர் பரப்பளவில் குறுமிளகு பயிரிடப்படுகிறது. அதில், பன்னீர், கரிமுண்டா ஆகிய இரண்டு வகை குறுமிளகு இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. அவை வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் குறுமிளகில் காரத்தன்மை அதிகம் உள்ளதால் மக்களிடம் தனி வரவேற்பு உள்ளது. இங்கு ஆண்டுக்கு, 1175 டன் வரை தரமான குறுமிளகு உற்பத்தி செய்யப்படுகிறது.
தேயிலை துாள் விலை 3 ஆண்டில் கடும் சரிவு
நீலகிரி மாவட்டத்தில் 130 சிறு, குறு தேயிலை தொழிற்சாலைகளில், சி.டி.சி., ஆர்த்தோடக்ஸ் உள்ளிட்ட தேயிலை துாள் உற்பத்தி செய்யப்படுகிறது. குன்னுார் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதனை நம்பி 45 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், பணியாளர்கள் வர்த்தகர்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் தேயிலை துாளுக்கான சராசரி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு, 2020 நவம்பரில் ஒரு கிலோ தேயிலை துாளுக்கு அதிகபட்ச விலையாக 130 ரூபாய் கிடைத்தது. கடந்த, 2021 மே மாதம், 125 ரூபாய்; 2022ல் மே மாதம் 117.03 ரூபாய் என இருந்தது. தற்போது, 96.80 ரூபாயாக சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சராசரி விலை கிலோவுக்கு 33.50 ரூபாய் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.