பாலிதீன் என்பது அழிக்க முடியாத ஓர் அரக்கன்; நம்மையும், நம் சந்ததியையும் வாழ வைக்கும் இந்த இயற்கையை மெல்ல மெல்ல அழித்து வருகிறது. இதை சாதாரண பிரச்னையாக நாம் கடந்து செல்கிறோம். நம் அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஒரு பாலிதீன் பொருளின் பயன்பாடு சில நிமிடங்கள் மட்டும் தான்.
ஆனால் வெளியே துாக்கியெறியப்படும் அதன் வாழ்நாள் ஆயிரம் ஆண்டுகளாகும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது மனித இனம் மட்டுமின்றி, விலங்கினங்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
உயிருக்கே ஆபத்து
பாலிதீன் பொருட்கள் 90 சதவீதம் மறு சுழற்சியில் பயன்படுத்த முடியாமல் போகிறது என்பது வேதனையான விஷயம். மறு சுழற்சியில் பயன்படுத்த முடியாமல் போகும் எஞ்சிய பாலிதீன் பொருட்கள் எரித்து அழிக்கப்படுகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றில் விஷத்தை கலந்து விடுகிறது. இது பல்வேறு நோய்களுக்கு அடித்தளமாக உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
துாக்கியெறியப்படும் பாலிதீன் பொருட்கள் கால்வாய்களில் சென்று தேங்கி அடைத்துக் கொள்கிறது. இது மழைநீர் வடிகால்களில் நீரோட்டத்தை தடுக்கிறது. நிலத்தடி நீர் ஆதாரத்தை இது அழிப்பதாக உள்ளது. கழிவுநீர் கால்வாய்களில் தேங்கும் போது, கொசுக்கள் போன்றவற்றின் உற்பத்தியைப் பெருக்கி, அதன் மூலம் தொற்று நோய்களுக்கும் வழியை ஏற்படுத்துகிறது. கால்நடைகள் இதை உட்கொள்ளும் போது அவற்றின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.
விளைநிலங்களில் இது நிரந்தரமாக தங்குவதால், நிலத்தின் தன்மை பாதித்து, விவசாயம் பாழாகிறது. கடல் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள், அங்கு வாழும் உயிரினங்களை பாதிக்கிறது.பாலிதீன் என்ற எமன், மனிதர்கள், விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள், காற்று, நீர் நிலை, நிலம் என சகல இடங்களிலும் 'ஆக்டோபஸ்' கரங்களால் அழிவை மட்டுமே கொண்டு வந்து சேர்ப்பதாக உள்ளது.
பயன்படுத்தப்பட்ட வாகன டயர்கள் தீயில் அழிக்கும் போது வெளியேறும் நச்சுகள் மனித இனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் தினசரி நடைமுறையில் பல்வேறு வகைப்பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இதில் பெருமளவு கழிவுகளாக வெளியேற்றப்படுகிறது.
மறுசுழற்சி முறை
ஈரக் கழிவுகள் என்பவை, மக்கும் கழிவுகள்; வீடுகள், கடைகள் மற்றும் ஓட்டல்களிலிருந்து வெளியேற்றப்படும் காய்கறி மற்றும் பழ வகை கழிவுகள்; பூக்கள், இலைகள், மாலைகள், இறைச்சிக்கழிவுகள் மக்கும் வகையை சேர்ந்தவை. இவற்றை நுண் உரமாக மாற்றிப் பயன்படுத்தலாம். இயற்கை உரமாக விவசாய நிலங்களில் பயன்படுத்த முடியும்.
இதற்கு அடுத்ததாக உலர் கழிவுகள்; இவற்றை மறு சுழற்சி முறையில் அவற்றின் தன்மைக்கேற்ப பயன்படுத்தலாம்.
இதில் பிளாஸ்டிக் பொருட்கள், பால், எண்ணெய் உள்ளிட்ட பாக்கெட் கவர்கள்; பாலிதீன் டம்ளர், தட்டு, வாட்டர் பாட்டில்கள் போன்றவை உள்ளன. ரப்பர் பொருட்கள், தெர்மாகோல் அட்டைகள், ஸ்பாஞ்ச் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், தலைமுடி, தேங்காய் தொட்டிகள், உடைந்து போன விளையாட்டு பொம்மைகள் என இதன் பட்டியல் நீளும்.
காகித வகையில் நாளிதழ்கள், புத்தகங்கள், காகித தட்டு, டம்ளர், அழைப்பிதழ்கள், அட்டைப் பெட்டிகள், காகித உறைகள் போன்ற கழிவுகள் அதிகளவில் உள்ளன. இரும்பு வகையிலான கழிவுகள், தகடுகள், தகர டப்பாக்கள், எவர்சில்வர், அலுமினியம் போன்ற பாத்திர வகைகள், கம்பிகள் ஆகிய கழிவுகளும் உள்ளன.
இன்சினரேட்டர் முறை
வீடு தோறும் மின்னணு பொருட்களின் பயன்பாடு அதிகம் உள்ளது. மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட்கள், 'டிவி' அலங்கார விளக்குகள் போன்ற எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள் பயன்படுத்திய பின் கழிவுகளாக சேர்ந்து விடுகின்றன. தற்போது இதுபோன்ற கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகள் வந்துள்ளன.
மறு சுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத பாலிதீன் கழிவுகள் இன்சினரேட்டர் முறையில் குறைந்த கார்பன் வெளியேறும் விதமாக அழிக்கப்படும். அவற்றை கட்டுமானத்துக்குப் பயன்படுத்தும் விதமாக பிரிக்ஸ், டைல்ஸ் கற்களாக மாற்றலாம். வாட்டர் பாட்டில் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை உரிய வகையில், நுாலிழையாக மாற்றி ஆடை உற்பத்திக்குப் பயன்படுத்தலாம்.
'இ வேஸ்ட்' என்ற வகையில் சேகரமாகும் கழிவுகளில் பிளாஸ்டிக், எலக்ட்ரானிக் பொருட்களை மறு சுழற்சியில் பயன்படுத்தலாம். பாலிதீன் பொருட்களுக்குப் பதிலாக, துணிப்பைகள், காகித பைகள், இலைகள், பாக்கு மட்டை, சில்வர் பாத்திரங்கள், உலோகங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தான் இதற்கு தீர்வு ஏற்படும். இதை விட மிக ஆபத்தானதாக தெர்மாகோல் உள்ளது. பாலிதீனை விட பல மடங்கு ஆபத்து இதில் மறைந்துள்ளது.
கட்டமைப்பு அவசியம்
கழிவுகள் கையாள்வதில் உரிய உட்கட்டமைப்பு, மனித சக்தி ஆகியன குறைவாக உள்ளது. இதற்குரிய கட்டமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும். அதே சமயம் முழுமையாகவே அரசு இதை கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் சரியில்லை. தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் அரசு நிர்வாகத்துடன் கை கோர்க்க வேண்டும். சிலரின் சுய லாபம், பொறுப்பற்ற செயல்கள் காரணமாக ஒட்டுமொத்த பூமியே பாழாவதை அனுமதிக்க கூடாது.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வெளியேற்றும் பொறுப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். அரசு துறைகளுடன் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து இதற்கான தீர்வுகளை ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை என்பதை ஒரு பாடமாக கொண்டு வருவதன் மூலம் வருங்கால சந்ததியை நாம் தயார்படுத்த முடியும். அனைத்து தொழில் நிறுவனங்களிலும் திடக்கழிவு மேலாண்மைக்கு தனியாக பிரிவு ஏற்படுத்தி உரிய பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும்.
இதன் மூலம் நிறுவனங்களில் இருந்து கழிவுகள் அதிகளவில் வெளியேறுவது தவிர்க்கப்பட்டு உரிய வகையில் கையாளப்படும். உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள திடக்கழிவு மேலாண்மை தனியாக ஒரு துறை ஏற்படுத்தி அதன் கீழ் இயங்க வேண்டும்.
பொதுமக்கள் மத்தியில் இதை ஒரு கட்டாய நடைமுறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு, மீறுவோர் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கழிவுகள் சேகரித்து மறு சுழற்சிக்கு தயார்படுத்தும் செயல்பாடுகள் துவங்கினால், வேலை வாய்ப்பு, மகளிர் வருவாய் என்பதோடு கழிவுகள் சேரும் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.