ஊட்டி;ஊட்டி படகு இல்லம் பகுதியில் நடந்து வரும் சாகச விளையாட்டு பூங்கா பணிகளை சுற்றுலாதுறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி படகு இல்லத்தில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாகச விளையாட்டுக்கான பணிகள் நடந்து வருகிறது. தவிர, படகு இல்லம் பகுதியில், 5 கோடி ரூபாயில் உணவகம் கட்டப்படும் இடம்; 3.25 கோடி ரூபாயில் கட்டப்படும் மரவீடு உள்ளிட்ட பிற பணிகளை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று காலை ஆய்வு செய்தார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''ஊட்டி படகு இல்லத்தில் சாகச பூங்கா அமைப்பதற்கு, 10 கோடி ரூபாய்; கோடப்பமந்து கால்வாய் பணிக்காக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர வாய்ப்புள்ளது,'' என்றார்.
ஏரியில் கரையும் கோடிகள்
ஊட்டி கோடப்பமந்து பிரதான கால்வாய் கடந்த காலங்களில், பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன. கடந்த, 2020 அ.தி.மு.க., ஆட்சியில், கால்வாய் மற்றும் ஏரி சீரமைப்புக்கு, 5.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 'அதில், நடந்த குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என, தி.மு.க., வலியுறுத்தியது.
தற்போது, அதே கால்வாய் பணிக்கு சிறப்பு மலைப் பகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து, 10 கோடி ரூபாய் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பணிகள் நிறைவு பெறாத நிலையில், அடுத்தடுத்து நிதி ஒதுக்கி, ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மக்கள் வரிபணம் கால்வாய்; ஏரியில் கரைக்கப்படுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.