ரெட்டியார்சத்திரம்,-முத்தனம்பட்டி -- தருமத்துப்பட்டி ரோட்டில் பாலங்கள் புதுப்பிப்பு பணியில் நிலவும் அலட்சியத்தால் தினமும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள முத்தனம்பட்டி- தருமத்துப்பட்டி ரோட்டில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பல இடங்களில் தனியார் ஆக்கிரமிப்புகளால், போதிய அகலம் இல்லை. வாகன போக்குவரத்திற்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் விரிவாக்கத்திற்கான கோரிக்கை நீடித்தது. சில வாரங்களுக்கு முன் இதற்கான பணிகள் துவங்கியது.
அதிகாரிகளின் போதிய கண்காணிப்பு இல்லாததால், சீரமைப்பு பணியில் அலட்சிய அம்சங்கள் அதிகரித்து வருகிறது. இப்பிரச்னையால் விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் தற்காலிகமாக துணை பாதைகள் ஏற்படுத்தியுள்ளனர்.
அவைகளும் முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். மழை பெய்ததும் துணை பாதைகளில் கொட்டப்பட்ட மணல்கள் சகதியாக மாறி அவ்வழியாக செல்வோரை தடுமாற வைக்கிறது. நீடிக்கும் இப்பிரச்னை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சஞ்சீவி ,தனியார் நிறுவன ஊழியர், குட்டத்துப்பட்டி: சில இடங்களில் எதிர்ப்பு காரணமாக, ஆக்கிரமிப்புகள் சரிவர அகற்றப்படாமல் ரோடு விரிவாக்க பணி நடப்பதாக புகார் நீடிக்கிறது. இத்தடத்தில் 8க்கு மேற்பட்ட பாலங்கள் புதுப்பிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
சில பாலங்கள் பணி முடிந்துள்ளதால் சமப்படுத்தாத மேடு பள்ளங்களுடன் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது. பாலத்தின் இணைவு பகுதியில், ஜல்லி கற்களுடன் தார் ஊற்றி சீரமைப்பதில், தாமதம் தொடர்கிறது. பாலங்கள் சீரமைப்பு பகுதியில் வலுவற்ற துணைப்பாதையுடன் குழாய் பாலங்களின்றி வெறுமனே மண் கொட்டி நிரப்பியுள்ளனர்.
சமீபத்திய சாரல் மழையில் சேறும் சகதியுமாக மாறி வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கி வருகின்றன.
சம்பந்தப்பட்ட இடங்களில், வழித்தட மாற்றத்திற்கான எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல் விபத்துகள் தொடர்கிறது. கனரக, சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, டூவீலர்களில் செல்வோரும் பாதிப்படைகின்றனர்.