விழுப்புரத்தில் தொடரும் கொலை, மோதல் சம்பவங்களால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு பகுதியில், நீண்ட காலமாக சில ரவுடி கும்பல் முகாமிட்டு, மது அருந்தி மோதல், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் சில கும்பலுக்குள் மோதல் ஏற்பட்டு, நேற்று, பட்டப்பகலில் கொலையும் அரங்கேறியுள்ளது.
கடந்த மாதத்தில், விழுப்புரம் எம்.ஜி., ரோட்டில், பல்பொருள் அங்காடி ஊழியர் , கஞ்சா போதை நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவமும், கஞ்சனுார் அருகே 3 மாத கர்ப்பிணி பெண்ணை, காதலனும், அவரது நண்பர்கள் கொலை செய்து புதைத்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விக்கிரவாண்டி அருகே பிளஸ் 2 மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவமும், காணை அருகே காதல் விவகாரத்தில், ரவுடி துணையுடன் காதலன் அடித்து கொலை செய்யப்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் அருகே நண்பர்களுக்குள் எழுந்த கஞ்சா போதை தகராறில், வாலிபர் கொலை செய்யப்பட்டது. பொம்மையார்பாளையம் பகுதியில் முன்விரோத மோதலில் ஹோட்டல் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது.
செஞ்சி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில், தம்பியை, அண்ணன் வெட்டிக்கொலை செய்தது, போன்ற பல கொலை சம்பவங்கள், கடந்த ஒரு மாதத்தில் தொடர்ந்து அரங்கேறி வருவது விழுப்புரம் மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மது, கஞ்சா போதையால், இது போன்ற குற்றசம்பவங்கள் அதிகரித்து வருவது, விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இதனால், புதிய எஸ்.பி., சசாங்சாய் தனது அதிரடி நடவடிக்கையால், குற்றப்பிரிவு போலீசாரை துரிதப்படுத்தி, பரவலாக நடந்து வரும் இதுபோன்ற கொலை, மோதல் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.