விழுப்புரம் : கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் உள்ளிட்ட ஆவணங்களை, அவரது தாயாரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
கடலுார் மாவட்டம், பெரியநெசலுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி, 17; இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
பள்ளி விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
அவரது தாய் செல்வி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்கு பிறகு, கடந்த மே மாதம் 15ம் தேதி 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர்.
அதில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை, வழக்கிலிருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கம் செய்திருந்தனர். வழக்கின், குற்றப்பிரிவுகளும் மாற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், ஜூன் 5ம் தேதி காலை, நேரில் ஆஜராகி கருத்தை தெரிவிக்கும்படி, ஸ்ரீமதியின் தாய் செல்விக்கு, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதனையடுத்து, வழக்கறிஞர்கள் ரத்தினம், லுாசியா, காசி விஸ்வநாதன் உள்ளிட்டோருடன், நேற்று காலை, ஸ்ரீமதியின் தாயார் செல்வி, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது, இந்த வழக்கில் ஆட்சேபனையை தெரிவிப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, முதலில் வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் மற்றும் வழக்கின் ஆவணங்கள், சாட்சி பதிவுகள் ஆகிய முழு விபரத்தை அளிக்க வேண்டும்.
ஸ்ரீமதி, அவரது மாமா செல்வம் ஆகியோர் பயன்படுத்திய மொபைல் போன்களையும் ஒப்படைக்க வேண்டும் எனவும், செல்வி தரப்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, ஸ்ரீமதியின் தாய் கேட்டுள்ள குற்றப்பத்திரிகை நகல் ஆவணங்களை ஒப்படைக்கும்படி சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு நேற்று மாலை உத்தரவிட்டார்.
அதன்படி, குற்றப்பத்திரிகை நகல் உள்ளிட்ட முழு ஆவணங்களும், கோர்ட் மூலமாக வரும் 12ம் தேதிக்குள் செல்வியிடம் வழங்க, சி.பி.சி.ஐ.டி. தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.