விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் கட்சி நிர்வாகிகளுக்குள் நிலவி வரும் பனிப்போரால், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழாவிற்காக சுவர் விளம்பரம் செய்வதை, தி.மு.க., நிர்வாகிகள் கைவிட்டனர்.
தற்போது தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், கடந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்த நாள் விழாவின் போது திண்டிவனத்திலுள்ள மேம்பால சுவர், தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுவர்களில் தி.மு.க., நிர்வாகிகள் போட்டி போட்டுக் கொண்டு கருணாநிதியின் படம், அமைச்சர் மஸ்தானின் படத்தை மெகா சைசில் வரைந்து தள்ளினர்.
இந்த ஆண்டு கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழா 3ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், திண்டிவனம் உள்ளிட்ட பல இடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில், கருணாநிதியின் பிறந்த நாள் விழா சுவர் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தது, உடன் பிறப்புகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.,வினர் விளம்பரங்களை எழுதாமல் கோட்டை விட்டதால், வரும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க., மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்களை திண்டிவனம் மேம்பாலம் உட்பட பல்வேறு இடங்களில் அ.தி.மு.க., நிர்வாகிகள் போட்டி போட்டிக் கொண்டு வரைந்து தள்ளுகின்றனர்.
அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜெ.,வின் பிறந்த நாளுக்காக தற்போதே திண்டிவனத்தில் அ.தி.மு.க.,வினர் விளம்பரங்களை செய்வதற்காக சுவர்களை ரிசர்வ் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் நிலவி வரும் உட்கட்சி கோஷ்டி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுவர் விளம்பரம் செய்வதில் சுணக்கம் காட்டியதாக கட்சியினரே புலம்பி வருகின்றனர்.