சிதம்பரம் : 'ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
இது குறித்து சிதம்பரத்தில் அவர் கூறியதாவது:
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு, மத்திய அரசின் அலட்சிய போக்கே காரணம் என அத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும். ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் கடந்த ஏப்.,8ம் தேதி கோவிலுக்குள் நுழைந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டும் யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, வரும் 9ம் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேகதாது அணை குறித்து காவிரி நதி நீர் ஆணையத்திடம் எடுத்துரைத்துள்ளோம். அதனை மீறி ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்து தொகுதிகள் உயர்த்தப்படவுள்ளது. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் தொகுதிகளை உயர்த்தி பா.ஜ., தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் ஆதரவின்றி வெற்றி பெற பா.ஜ., தொகுதி வரையறை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.