திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாக சென்னை மற்றும் புதுச்சேரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இவற்றில் பாதியளவு பஸ்கள் ஓட்டை உடைசலாக உள்ளன.
திருவண்ணாமலையில் இருந்து தேவைக்கு ஏற்ப ஒரு மணி நேரத்தில் 15 முதல் 20 பஸ்களை சென்னைக்கு இயக்குகின்றனர். நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலையில் உள்ள 3 பணிமனை இருந்தும், செங்கம், திருக்கோவிலுார் உள்ள பணிமனைகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குகின்றனர்.
இதே போல் திருவண்ணாமலையிலிருந்து புதுச்சேரிக்கு 11 பஸ்களும், செஞ்சியில் இருந்து 5 பஸ்களும், புதுச்சேரி, திண்டிவனத்தில் இருந்து தலா 3 பஸ்களையும் இயக்குகின்றனர்.
சென்னை செல்லும் 200க்கும் மேற்பட்ட பஸ்களில் 70க்கும் மேற்பட்ட பஸ்களும், புதுச்சேரிக்கு இயக்கப்படும் பஸ்களில் 14 பஸ்களும் 15 ஆண்டுகளைக் கடந்தவை. இவற்றில் பயணிகள் உட்காரும் சீட்டுகள் கிழிந்து ஒட்டு போடப்பட்டுள்ளது.
சீட்டின் குழாய்கள் வளைந்தும் நெளிந்தும் காணப்படுகிறது. பஸ்சின் உள்ளேயும், வெளியேயும் பல இடங்களில் உடைந்த பகுதிகளை வெல்டிக் வைத்து இணைத்துள்ளனர்.
மழை வந்தால் ஒழுகாத பஸ்களே கிடையாது. ஜன்னல்களில் உள்ள கதவுகளும் சரிவர திறக்கவும், மூடவும் முடியாது. இந்த பஸ்களில் பயணிக்கும் போது ஒரு வித அதிர்வோடு பயணிக்க வேண்டி உள்ளது. இதனால், மழையின் போது பயணிகள் நடத்துனரிடம் தகராறு செய்கின்றனர்.
விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் திருவண்ணாமலை, சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்களே லாபத்தில் இயங்குகின்றன.
வேகம் குறைவாகவும், எந்த வசதியும் இல்லாத இந்த பஸ்களை எக்ஸ்பிரஸ் பஸ் என பெயர் நாமகரணம் செய்து பயணிகளிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். மேல்மலையனுார் அமாவாசை திருவிழா, திருவண்ணாமலை பவுர்ணமி நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் வரை பஸ்களில் பயணிக்கின்றனர்.
தமிழகத்தின் தலைநகருக்குச் செல்லும் இந்த ஓட்டை உடைசல் பஸ்களால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே 15 ஆண்டுகளை கடந்த ஓட்டை உடைசல் பஸ்களை மாற்றம் செய்து புதிய பஸ்களை இயக்க போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.