காங்கேயம்: காங்கேயம் அருகே, பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி வரும் வீட்டால், சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சிக்கினார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த கொடுவாய், சாய்ராம் நகரில், சந்தேகப்படும்படியான ஆசாமி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில், சொகுசு வீடு கட்டி வருவதாக, காங்கேயம் போலீசுக்கு தகவல் போனது. வீடு கட்டி வரும் நபரை பிடித்து விசாரித்த, இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சென்னை, வியாசர்பாடி, கரிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்கிற ஜனார்த்தன், 40; போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி வெள்ளை ரவியின் கூட்டாளியாகவும், தற்போது வியாசர்பாடி ரவுடி சூச்சி சுரேஷின் வலது கரமாக செயல்பட்டு வருகிறார்.
இவர் மீது கொடுங்கையூர், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 10க்கும் மேற்பட்ட கொலை, 10க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்கு, வெடிகுண்டு வீசுதல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜாமினில் வந்தவர் தலைமறைவாகி, திருப்பூரில் வசித்து வந்தார். போலீசாரிடம் இருந்து நிரந்தரமாக தப்பிக்க, காங்கேயம் பகுதியில் குடியேற, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் வீடு கட்டி வந்துள்ளார்.
ஜனாவை கைது செய்து, சென்னை போலீசில் ஒப்படைத்தோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி, காங்கேயம் அருகே கைது செய்யப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.