திருப்பூர் மாவட்டத்தில் மூடப்பட வேண்டிய டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்த பட்டியல், இரண்டாவது முறையாக திருத்தி அனுப்பப்பட்டுள்ளது. இதில், குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 5,600 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. கடந்த சட்டசபை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி, '500 மதுக்கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்தார்.
சமீபத்தில் நடந்த கள்ளச்சாராய பலிகள், டாஸ்மாக் மதுக்கடை பாரில் மது அருந்திய நபர்கள் பலியானது போன்ற விவகாரங்கள், மதுக்கடை மூடப்படும் என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் பட்டியலை, உரிய மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டது.
அனைத்து மாவட்டங்களிலும், விற்பனை குறைவான கடைகள்; ஒரே பகுதியில் அமைந்துள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகள்; கோவில், மருத்துவமனை போன்ற விதிகளுக்குப் புறம்பான இடங்களில் உள்ள கடைகள் என பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியது.
பட்டியல் திருத்தம்
கோவை மண்டலத்தில் மொத்தம் 88 மதுக்கடைகள் மூட பரிந்துரை செய்து அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 251 மதுக்கடைகளில் 22 மதுக்கடைகள் தேர்வு செய்து பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் அனுப்பப்பட்ட பட்டியலுக்கு உரிய விளக்கம் கேட்டு பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது பட்டியல் அனுப்பப்பட்டது. அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகள் என்ற வகையில் முதலில் 5 கடைகள் பரிந்துரைக்கப்பட்டது. அதில் ஒரு கடை மட்டும் இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மருத்துவமனை பகுதியில் உள்ள 4 கடைகளில் 2 மட்டும் இடம் பெற்றுள்ளது. வழிபாட்டு தலங்கள் அருகேயுள்ள கடைகள் பட்டியலில் 6 கடைக்குப் பதிலாக 4 கடைகள்; பள்ளி அருகேயுள்ள கடை ஒன்று முன்னர் பரிந்துரைக்கப்பட்டது; இரண்டாவது பட்டியலில் இடம் பெறவில்லை. அதே சமயம் கடைகள் எண்ணிக்கையை சமன் செய்யும் விதமாக விற்பனை குறைவு என்ற அடிப்படையில் வேறு 9 கடைகள் மூடுவதற்கு பட்டியல் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.
நிர்வாக இயக்குனருக்கு புகார்
திருத்தப்பட்ட பட்டியலில் நடந்த குளறுபடி தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு இதுகுறித்து புகார் சென்றுள்ளது. என்ன காரணத்துக்காக பட்டியல் மாற்றப்பட்டது; இதில் யாருடைய தலையீடாவது இருந்ததா போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் பெற டாஸ்மாக் மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இந்த அறிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டொரு நாளில் இது குறித்து அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.