திருப்பூர் மாநகரில் நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ளதால், மக்கள் அச்சத்துடன் நடந்து செல்வதாக, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவிலான மக்கள் குறை கேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., ஜெய்பீம், துணை கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள், மனுக்களை பெற்றனர். மொத்தம், 416 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொது செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் போடப்பட்ட பெரும்பாலான நடைபாதைகளை, துணிக்கடை, நகை கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன. குமரன் ரோடு, அவிநாசி ரோடு, கொங்குநகர் பிரதான சாலை, 60 அடி ரோடு, மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து மாநகராட்சி அலுவலகம் செல்லும் ரோடு, மங்கலம், பல்லடம் செல்லும் ரோடுகள், காங்கயம் ரோடு, பி.என்., ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. பாதசாரிகள் உயிரை பணயம் வைத்துக்கொண்டு சாலையோரங்களில் நடந்து செல்லவேண்டியுள்ளது. இவ்வாறு பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் மனு அளிக்கப்பட்டது.