தாராபுரம் குப்பை ஆலைக்கு
தொடரும் நுாதன எதிர்ப்பு
தாராபுரம் நகராட்சி ஏழாவது வார்டு கோட்டைமேடு பகுதியில், குப்பை கழிவு ஆலை உள்ளது. இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் நடந்த நகராட்சி கூட்டத்தில், வார்டு கவுன்சிலர் யூசுப், அலுவலகத்துக்குள் குப்பைகளை கொட்டி விரக்தியை காட்டினார்.
ஆனாலும் நடவடிக்கை இல்லாததால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். நகராட்சி வளாகத்தில் குப்பையை கொண்டு வந்து நேற்று மாலை வைத்தனர். துர்நாற்றம் வீசியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக சமாதானம் பேசிய ஆணையர் ராமரிடம், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதால் மக்கள் கலைந்து சென்றனர்.
வாகன சோதனையில்
சிக்கிய குற்றவாளி
தாராபுரத்தில், வாகன சோதனையில், வீடுகளில் திருடிய களவாணியை, போலீசார் வளைத்து பிடித்தனர்.
தாராபுரம், கொளத்துப்பாளையம், ராம் நகர் உள்ளிட்ட பகுதி வீடுகளில், பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பான கும்பலில் தேனியை சேர்ந்த முருகேசன், 52, என்பவரை, கடந்த மார்ச் 5ல், தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக அர்ஜூன் என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், வாகன சோதனையில் அர்ஜூன் சிக்கினார். தாராபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
'மொபைல்' திருடிய
4 பேர் கும்பல் கைது
ஈரோட்டில், மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
கருங்கல்பாளையம் போலீசார், ஈரோடு வைராபாளையம் பகுதியில், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக திரிந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 19, சந்தோஷ், 19, யுவராஜ், 20, சித்தோட்டை சேர்ந்த ராகவேந்திரா, 20, என்பது தெரியவந்தது.
மது போதையில் இருந்தவர்களிடம் நால்வரும், மொபைல் போன்களை திருடியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இரு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இன்று 27 நகர்ப்புற
நலவாழ்வு மையங்கள் திறப்பு
திருப்பூர் மாவட்டத்தில் இன்று, 27 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படுகின்றன.
அனைத்து பகுதி மக்களுக்கும் தேவையான மருத்துவ வசதியை உறுதி செய்ய, புதிதாக நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் இன்று திறக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், துணை பணியாளர் தலா ஒருவர் வீதம் ஐந்து பேர் கொண்ட குழுவினர் பணிபுரிவர்.
மக்களின் வசதிக்காக காலை, 8:00 முதல் மதியம், 12:00 வரை, மாலை, 4:00 முதல் இரவு, 8:00 மணி வரை இவை செயல்படும். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ் செயல்படும் இம்மையங்களில் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படும். அதிகளவில் அத்தியவாசிய மருந்து பொருட்கள் இருப்பு வைக்கப்பட உள்ளது. மாநிலம் முழுதும், 500 நலவாழ்வு மையங்களை இன்று, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் - அனுமந்தபுரம், உடுமலை - ராமசாமி நகர், அப்பல்லோ குமரன் அவென்யூ, காவிலிபாளையம் (15 வேலம்பாளையம்), நஞ்சப்பா நகர், லட்சுமி கார்டன் (குருவாயூரப்பன் நகர்), கே.வி.ஆர்., நகர், முருகம்பாளையம் என, 27 இடங்களில் இன்று மையங்கள் திறக்கப்படுகிறது.
இதில் திருப்பூர் பல்லடம் ரோடு, தெற்கு எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், தென்னம்பாளையம் நகர்ப்புற நல மைய திறப்பு விழா, காணொலி வாயிலாக நடக்கிறது.
திருஞானசம்பந்தர்
குருபூஜை விழா
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், திருஞானசம்பந்த சுவாமிகளின் குருபூஜை பெருவிழா நடைபெற்றது.
கோவில் உள்பிரகாரத்தில் அருள்பாலிக்கும், நால்வர் பெருமக்கள் உட்பட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார தீபாராதனை நடந்தது. கருணாம்பிகை கலையரங்கில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில், திருஞானசம்பந்த பெருமான் அருளிய 141 - 200வது பதிகம்; சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் அருளிய வரலாற்று முறைப்படி முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை, கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில், ஓதுவா மூர்த்திகள் பண்ணிசை மரபோடு பாராயணம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, திருஞானசம்பந்தர், கோவிலை வலம் வந்தனர்.
2,௦௦௦ டன் நெல் வருகை
செங்கல்பட்டில் இருந்து ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு, சரக்கு ரயிலில், 2,௦௦௦ டன் நெல், நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பினர்.
எலந்தகுட்டைமேட்டில்
7.20 மி.மீ., மழை
ஈரோடு, ஜூன் 6-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக எலந்தகுட்டைமேட்டில், 7.20 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் கோபியில், 4.20 மி.மீ., பெய்தது. மாவட்டத்தில் வேறெங்கும் மழை பெய்யவில்லை.
சட்ட உதவி பாதுகாப்பு
கவுன்சிலில் பல்வேறு பணி
விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் தொகுப்பூதியத்தில் பணியாற்ற, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 'சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்புக்கு அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், வரவேற்பாளர், உதவியாளர் பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
பணிக்கான தகுதி, தேர்வு முறை, விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி குறித்து தகவல்களுக்கு https://districts.ecourts.gov.in/erode என்ற, ஈரோடு மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான முருகேசன் தெரிவித்துள்ளார்.
மின் பயனீட்டாளர்
குறைதீர் கூட்டம்
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.
ஈரோடு, 948 - ஈ.வி.என்., சாலை, மின் கோட்ட அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில், ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி மின் பயனீட்டாளர் குறை, கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.
வீட்டின் ஓட்டை பிரித்து
20 பவுன், பணம் திருட்டு
மளிகை கடை உரிமையாளர் வீட்டு கூரையை பிரித்து, 20 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாயை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் அழகுசெல்வன், 40; ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். மனைவி ஜோதி, இரு 2 மகள்களுடன் அதே பகுதியில் ஓட்டு வீட்டில் வசிக்கிறார். மூன்று நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றவர், நேற்று காலை திரும்பினார். பூட்டை திறந்து உள்ளே சென்றபோது, பொருட்கள் சிதறி கிடந்தன.
வீட்டின் கூரையில் சில ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தன. பீரோவில் வைத்திருந்த, 20 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். தினக்கூலி தொழிலாளர் அதிகம் வசிக்கும்
பகுதியில், வீட்டை நோட்டமிட்டு களவாணிகள் கைவரிசை காட்டியுள்ளனர்.
திருமணம் செய்ய வலியுறுத்தி
பெண்ணை மிரட்டியவர் கைது
பெண்ணை போட்டோ எடுத்து, திருமணம் செய்து கொள்ள மிரட்டியவரை, கோபி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கவுந்தப்பாடியை சேர்ந்த, 35 வயது பெண், 2012ல் கோவையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். அப்போது கோவையை சேர்ந்த ராகுல் ஸ்ரீநாத், 37, என்பவரும் அதே நிறுவனத்தில் வேலை செய்தார். நட்பு முறையில் பழகிய ராகுல் ஸ்ரீநாத், மொபைல்போனில் அவரை போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், மிரட்டி வந்தார்.
பெண் சம்மதம் தெரிவிக்காததால், ஆத்திரமடைந்த ராகுல் ஸ்ரீநாத், பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரின் மாமியார் வீட்டுக்கு சென்று படங்களை காட்டியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண், கோபி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். வழக்குப்பதிந்த போலீசார் ராகுல் ஸ்ரீநாத்தை கைது செய்தனர்.
மின்னல் தாக்கி
பசு பலி
வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம், செல்லியங்குட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 48; விவசாயி. இரண்டு பசு மாடு, ஆடுகள் வளர்த்து வருகிறார்.
எண்ணமங்கலம், கோவிலுார் உள்ளிட்ட இடங்களில், நேற்று மாலை இடி-மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது தொழுவத்தில் மின்னல் தாக்கியதில், அங்கு கட்டப்பட்டிருந்த ஒவு பசுமாடு பலியானது. மற்றொரு பசு பலத்த காயமடைந்தது.