ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட, 312 மனுக்கள் வரப்பெற்றன. தொடர்புடைய துறையினரிடம் வழங்கி, விசாரித்து தீர்வு காண உத்தரவிடப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரு பயனாளிகளுக்கு காதொலி கருவி, ஒருவருக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, 2,000 ரூபாய்க்கான ஆணை வழங்கப்பட்டது.
காது கேளாதோர் அகில இந்திய தடகள போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்ற, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது யாசின், இரு தங்க பதக்கம் வென்றார். மாநில அளவிலான போட்டியிலும் முகமது யாசின், சண்முகசுந்தரம் ஆகியோர், தங்கம் மற்றும் நான்கு வெள்ளி பதக்கங்களை வென்றனர். இருவரையும் கலெக்டர் பாராட்டி கவுரவித்தார்.
அதிகாரிகள் மத்தியில் கலெக்டர் பேசியதாவது:
மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மேலான மனுக்கள், தீர்வு காணப்படாமல் உள்ளன. சில துறைகளில், 300 நாட்களை கடந்த மனுக்களும் உள்ளன.
அவற்றுக்கு விரைவான தீர்வு காணுங்கள். மக்கள் குறைதீர் கூட்டம் தொடர்பாக மாதம் ஒரு கூட்டம் நடத்தப்படும் அக்கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள், உரிய ஆவணங்கள், விபரங்களுடன் வர வேண்டும்.
சமீபத்தில் நடந்த ஜமாபந்தியில் அதிக எண்ணிக்கையில் பட்டா மாறுதல், அளவீடு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மனுக்கள் வந்தன. அவற்றை வி.ஏ.ஓ.,க்கள் - நில அளவையாளர் போன்றோர் ஒருங்கிணைந்து விரைவில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.