எருமப்பட்டி: எருமப்பட்டி டவுன் பஞ்., குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள, மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல், 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள முட்டாஞ்செட்டி சாலையில், இரண்டு டாஸ்மாக் கடைகள் எதிரெதிரே செயல்பட்டு வருகின்றன. இதேபோல், கைகாட்டி சாலையில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த, மூன்று டாஸ்மாக் கடைகளும் மிக அருகே, குடியிருப்பு பகுதிக்கு நடுவே உள்ளதால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், பள்ளி நேரங்களில் இந்த வழியாக செல்லும் மாணவர்கள், ஒருவித அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே, இந்த மூன்று டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக அரசு, நேற்று, மாநிலம் முழுவதும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்துள்ளது. எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் பொதுமக்களுக்கு இடையூறாக ஒரே இடத்தில் உள்ள, மூன்று டாஸ்மாக் கடைகளில், 2 கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நகருக்குள் உள்ள கடையை குடியிருப்புகள் இல்லாத பகுதிக்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.