நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாமகிரிப்பேட்டையில் உள்ள சீராப்பள்ளி ஏரி, தொப்பப்பட்டியில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை வெட்டி எடுக்க, விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மண் எடுக்க விரும்பும் விவசாயிகள், வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம், வண்டல் மண் எடுக்க வேண்டிய ஏரி அமைந்துள்ள கிராமம், வருவாய் கிராமத்தின் எல்லை வரம்புக்குள் அமைந்திருக்க வேண்டும்.
நஞ்சை நிலமாக இருந்தால், ஒரு விவசாயிக்கு, 25 டிராக்டரும்; புஞ்சை நிலமாக இருந்தால், 30 டிராக்டருக்கு மிகாமலும், விவசாய நிலத்தில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள நீர்நிலைகளில், விவசாயிகள் மண்ணெடுக்க விரும்பினால் விண்ணப்பத்துடன், நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ்களை இணைத்து, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.