தண்ணீர் தொட்டி சேதம்
சரிசெய்ய வலியுறுத்தல்
கட்டிப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, சேதாரமாகியுள்ள தண்ணீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
எலச்சிபாளையம் அடுத்த கட்டிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில், கடந்த சில ஆண்டுக்கு முன்னர் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது. அப்பகுதி மக்கள் அந்த தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்தனர். நாளடைவில் தொட்டியின் அடிப்பாகம் சேதாரமாகியுள்ளது. எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சேதாரமாகியுள்ள தண்ணீர் தொட்டியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயல் அலுவலர் பொறுப்பேற்பு
ப.வேலுாரில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த செல்வகுமார், கடலுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஈரோட்டில் பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, ப.வேலுார் செயல் அலுவலராக, நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருநாவுக்கரசை, ப.வேலுார் டவுன் பஞ்., துணைத்தலைவர் ராஜா உள்பட கவுன்சிலர்கள், டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ப.வேலுார் டவுன் பஞ்., வரலாற்றில் ஓராண்டில், 11வது செயல் அலுவலர் நியமிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
வாலிபர்
விபரீத முடிவு
ஆனங்கூரில் லாரி டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிபாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 33; லாரி டிரைவர். இவரது மனைவி கவிதா, 30; இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறால், ஒரு மாதத்திற்கு முன், துளசம்பட்டியில் உள்ள தாயார் வீட்டுக்கு, கவிதா சென்று விட்டார். இதனால் மனமுடைந்த பிரபாகரன், நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டர். வெப்படை போலீசார்
விசாரிக்கின்றனர்.
மது விற்பனை
டி.எஸ்.பி., எச்சரிக்கை
''பரமத்தி வேலுார் பகுதியில், சந்து கடைகளில் மது விற்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, டி.எஸ்.பி., ராஜமுரளி எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
பரமத்தி வேலுார் எல்லைக்குட்பட்ட ப.வேலுார், பரமத்தி, ஜேடர்பாளையம், கந்தம்பாளையம், வேலகவுண்டம்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில், சந்து கடைகளில் மது விற்பனை மற்றும் தாபா ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் மது அருந்த அனுமதி அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே, மதுபான பார்களை திறக்க வேண்டும். டாஸ்மாக் கடையை மூடிய நேரத்தில் மதுபான பார்களில் இருந்தோ, அதற்கு அருகிலிருந்தோ மது விற்றால் சம்பந்தப்பட்ட, 'பார்'களே அதற்கு பொறுப்பாகும். சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மரம் நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாமக்கல்லில் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஈஷா நாற்று பண்ணையில் மரம் நடும் விழா நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ., ராமலிங்கம், கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் செல்வராஜ், சன் இந்தியா நிறுவனர் ரங்கநாதன் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர். காவிரி கூக்குரல் இயக்கத்தினர் மற்றும் ஈஷா யோகா அமைப்பை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காலை உணவு திட்டம்
பணியாளர்களுக்கு பயிற்சி
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காலை உணவு திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி நடந்தது.
பள்ளிபாளையம் ஒன்றியத்தில், 41 அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்
படுத்த உள்ளனர். காலை உணவு திட்ட பணிக்காக, 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சி முகாம், நேற்று பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பி.டி.ஓ., டேவிட் அமுல்ராஜ், ஏ.பி.டி.ஓ., பாலவிநாயகம் ஆகியோர் தலைமையில் நடந்தது. இப்பயிற்சியில் அரசு அறிவித்துள்ள உணவை தயாரிப்பது, மாணவர்களுக்கு எப்படி உணவு பரிமாறுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஆண் சடலம் மீட்பு
நாமகிரிப்பேட்டை அருகே, இறந்து கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.
நாமகிரிப்பேட்டையில் இருந்து, பேளுக்குறிச்சி செல்லும் சாலையில் மசூதி உள்ளது. மசூதி அருகே, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, மசூதி அருகே அந்த முதியவர் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், ராசிபுரம் அச்சுக்கட்டி தெருவை சேர்ந்த துரைசாமி மகன் வெங்கடேஷ், 70, என்பது தெரிந்தது. இதையடுத்து நாமகிரிப்பேட்டை போலீசார்
சடலத்தை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.