சிவகங்கை:'கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி உயர்வில், பணியில் சேர்ந்த நாளை வைத்துதான் முதுநிலைப் பட்டியல் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 14ம் தேதி தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,' என, சங்க நிர்வாகிகள் கூறினர்.
இதுகுறித்து, தமிழக வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ராமச்சந்திரன், பொதுச் செயலர் ஜெயகணேஷ் ஆகியோர் கூறியதாவது:
இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர்களின் முதுநிலைப் பட்டியல் நிர்ணயம் செய்யும் போது, 2015 முதல் ஆறு ஆண்டுகள் பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அப்படி தயாரிக்கப்படும் பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர்ந்த நாளை தகுதியாகக் கொண்டு தான் தயாரிக்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்ட விதிமுறை.
ஆனால், அதைக் கண்டு கொள்ளாமல் வி.ஏ.ஓ.,க்களை பாரபட்சமாக நடத்தும் விதமாக வருவாய்த்துறை நிர்வாக கமிஷனர் செயல்படுகிறார்.
வி.ஏ.ஓ.,க்கள் பதவி உயர்வில், முதுநிலைப் பட்டியலை, பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு வெளியிடக்கோரி அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த்துறை ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று முன் தினம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தில், வருவாய்த்துறை நிர்வாகக் கமிஷனர் தலையிட்டு பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டே முதுநிலைப் பட்டியல் தயாரிக்க உத்தரவிட வேண்டும். தவறினால் வரும் 14ம் தேதி தமிழகம் முழுதும் கலெக்டர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.