வாலிநோக்கம்:-மன்னார்வளைகுடாவில் ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் அழிவின் விளிம்பில் டால்பின்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
மன்னார் வளைகுடாவில் தனுஷ்கோடி முதல் ரோஜ்மா நகர் வரையிலான ராமநாதபுரம் மாவட்டத்தின் நீண்ட நெடிய கடற்கரைப்பகுதி 130 கி.மீ.,க்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கிறது.
இயற்கை பாதுகாப்பு அரணாக கடல் பவளப்பாறைகள் காணப்படுகின்றது. மண்டபம், கீழக்கரை, சாயல்குடி வனச்சரகத்தில் 21 தீவுகள் உள்ளன. கடலில் இருந்து 4 முதல் 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் இவை அமைந்துள்ளது.மன்னார் வளைகுடா பகுதியில் தீவுகளை ஒட்டிய இடங்களில் அரியவகை டால்பின்கள் காணப்படுகின்றன. ஒரு சில தடை செய்யப்பட்ட வலைகளை விரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள மீனவர்களால் டால்பின்கள் அழிவை சந்திக்கின்றன.இயற்கை வளம் பாதுகாக்கும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' சுருக்கு மடி, இழுவை மடி, கரைவலைகளை கடலுக்குள் மற்றும் தீவிற்கு மிக அருகில் விரிப்பதால் சிறு மீன்களை மட்டுமே உண்டு வாழும் டால்பின்கள் கூட்டமாக வந்து வலையில் மாட்டிக்கொண்டு இறக்கின்றன. டால்பின்களின் மகத்துவத்தை அறிந்த சில மீனவர்கள் அவற்றை மீண்டும் கடலுக்குள் விடுகின்றனர். அதை உணராதவர்களால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமை, கடல் பசு, டால்பின்கள் பெருக்கமும், வாழ்விடங்களும் அழிவை சந்திக்கின்றன.
கடந்த பத்தாண்டுகளில் 100க்கும் மேற்பட்ட டால்பின்கள் வலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளன. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.