செஞ்சி: செஞ்சி கோட்டையில் மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் செஞ்சி கோட்டை உள்ளது.
மலைக் கோட்டை, தரைக்கோட்டை என 12 கி.மீ., சுற்றளவில் மூன்று மலைகளையும் இரண்டு குன்றுகளையும் இணைத்து செஞ்சி கோட்டையை கட்டி உள்ளனர்.
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு, பெரும் பகுதி மரம், செடிகள் வளர்ந்து காடுபோலவே இருக்கும். மலை கோட்டைக்கு செல்லும் வழியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.
கடந்த 12 ஆண்டுக்கு முன்பு காதல் ஜோடிகளை வழிமறித்து கொள்ளையடிப்பது, பலாத்காரம் செய்வது உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதனால் சுற்றுலா பயணிகள் அச்சத்திற்கு ஆளாகினர்.
இதையடுத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ஏற்பாட்டில் செஞ்சி கோட்டையில் புறக்காவல் நிலையம் திறந்தனர். செஞ்சி காவல் நிலையத்தில் இருந்து ஒன்று அல்லது இரண்டு போலீசார் இங்கு பணியில் அமர்த்தப்பட்டனர்.
அப்போதிருந்த காவல் துறை அதிகாரிகள் தீவிர ரோந்தும் வந்தனர். இந்திய தொல்லியல் துறையினரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணிக்கு அமர்த்தியது. இதன் பிறகு குற்ற சம்பவங்கள் கட்டுக்குள் வந்தன.
இந்நிலையில், கடந்த ஐந்தாண்டாக செஞ்சி காவல் நிலையத்தில் போலீஸ் பற்றாக்குறையால் புறக்காவல் நிலையத்தை மூடிவிட்டனர். செஞ்சி கோட்டைக்கு பலரும் மது பாட்டில்களுடன் வருகின்றனர்.
இவர்கள் பொது இடங்களில் மது அருந்துகின்றனர். இதை பொது மக்கள் கண்டிக்க முடியவில்லை. அத்துடன் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் சிலர் அடாவடியாக கிரிக்கெட் விளையாடுகின்றனர். இவர்கள் இந்திய தொல்லியல் துறையினருக்கு கட்டுப்படுவதில்லை.
சுற்றுலா பயணிகளிடம் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பொது மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் புகார் செய்ய 2 கி.மீ., துாரத்தில் உள்ள செஞ்சி காவல் நிலையம் வர வேண்டி உள்ளது.
எனவே செஞ்சி கோட்டைக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி செஞ்சி கோட்டையில் மூடி கிடக்கும் புறக்காவல் நிலையத்தை திறக்க காவல் துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.