மயிலாடுதுறை,:திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் போலியான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது குருமஹா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருந்து வருகிறார்.
புதுடில்லியில் பார்லிமென்ட் புதிய கட்டடத்தில், திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து வழங்கிய செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் உட்பட தமிழகத்தில் இருந்து பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தகவல் திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் பரவி வருகிறது. அதில் 'ஆட்சியாளர்கள் கையில் செங்கோலை ஒப்படைத்த ஒரு மண்டலத்துக்குள், துர் மரணங்கள் நிகழ்வது நல்லதல்ல. இது தவறானவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதற்காக கடவுள் கொடுக்கும் செய்தியாகக் கூட இருக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி, திருவாவடுதுறை ஆதீனம், பிரதமர் மோடி ஆகியோர் படங்களுடன் தனியார் 'டிவி' நிறுவனம் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, திருவாவடுதுறை ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன், மயிலாடுதுறை எஸ்.பி., நிஷாவிடம் கொடுத்துள்ள புகாரில், “மத மோதலை உருவாக்கும் வகையில் பொய் தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் மற்றும் அதைப் பகிர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என, கூறப்பட்டுள்ளது.