திண்டிவனம் : மரக்காணம் கள்ளச்சாராய சாவு எதிரொலியால் மாவட்டம் முழுதும் போலீசார்
நடத்திய ஒரு மாத வேட்டையில் 742 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 740
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில், கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் இறந்தனர். 40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில் 7 பேர் இறந்தனர். அடுத்தடுத்து பலர் இறந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்காததால், இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்த சம்பவத்தின் எதிரொலியால், எஸ்.பி., உட்பட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் புதிய எஸ்.பி., சசாங்சாய் பொறுப்பேற்றார். மாவட்ட மதுவிலக்கு சோதனைச் சாவடியில் இருந்த போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக, மாற்று போலீசார் நியமிக்கப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன.
சாராய வியாபாரிகள், போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்வோரை கண்டறிந்து அதிடிரயாக கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கள்ளச்சாராயம், புதுச்சேரி மதுகடத்துதல், 'கள்' இறக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக, கடந்த மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஒரு மாதத்தில் 742 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மதுவிலக்கு அமல்பிரிவில் 244 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 241 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் 498 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 499 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 740 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1,091 லிட்டர் கள்ளச்சாராயமும், 950 லிட்டர் சாராய ஊறல்களும், 3,585 லிட்டர் புதுச்சேரி சாராயமும், 7,439 லிட்டர் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பாக 23 இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி அனுமதியின்றி பனை மரத்தில் இருந்து இறக்கப்பட்ட 654 லிட்டர் 'கள்' பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மரக்காணம் சம்பத்திற்கு பிறகு ஒரே மாதத்தில் போலீசாரின் அதிரடி கைது நடவடிக்கையால், சாராய வியாபாரிகள், போலி மதுபாட்டில்கள் விற்போர் கலக்கத்தில் உள்ளனர்.