விழுப்புரம்:விழுப்புரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
தாட்கோ மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 223 பேருக்கு 1.07 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு, தாட்கோ மூலம் தொழில் முனைவோர்களுக்கான வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள், சுதந்திரமாக செயல்பட அதிநவீன உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று 223 பயானிகளுக்கு 1.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, துாய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. தமிழகத்தில் 10 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 1,310 உறுப்பினர்கள் உள்ளனர். துாய்மைப் பணியாளர்களுக்கான திட்டங்கள், ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொடுக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு உள்ளது. மக்களின் தேவைகளை, அனைத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் நிறைவேற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய சேர்மன்கள் வாசன், கலைச்செல்வி, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் மணிமேகலை, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, ஆவின் பொது மேலாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.