தஞ்சாவூர்:தஞ்சாவூரில் காற்றுடன் பெய்த மழையால், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில், அறுவடைக்கு தயாரான நெல் பயிர்களும், வாழை மரங்களும் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் பகல் முழுதும் வெயில் வாட்டியது. இரவு சூறாவளிக் காற்றுடன், பலத்த மழை பெய்தது.
இதனால், சூரக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், 350 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடிகால் வாய்க்கால்கள், 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் துார் வாரவில்லை.
இதனால், விளைநிலங்களுக்குள் மழை நீர் புகுந்து, மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்த நிலையில், வருவாய் இழப்பையும் சந்திக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு கூறினர்.
வாழை பாதிப்பு
இதேபோல, பலத்த மழையால், திருவையாறு, கடுவெளி, ஆச்சனுார், பனையூர், வைத்தியநாதன் பேட்டை பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், 40 நாட்களில் அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள், வேருடன் விழுந்து சேதமடைந்தன.
திருவையாறு பகுதிகளில், நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடி செய்யும் சூழலில், 'நெல் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவது போல, வாழைக்கும் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.