சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, பயணியருக்கு 'மெட்ரோ பாஸ்' வழங்கும் திட்டத்தை துவங்கி உள்ளது. இதற்காக, மொத்த 'கியூ.ஆர்., டிக்கெட்' முன்பதிவு முறையை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, கார்ப்பரேட் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படும் அழைப்பிதழ்களில், மெட்ரோ ரயிலின் கியூ.ஆர்., குறியீடு டிக்கெட் இடம் பெற்றிருக்கும். அந்த அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டணமும் செலுத்தாமல், மெட்ரோ ரயில்களில் பயணிக்கலாம்.
முதல் முயற்சியாக, ஜீபோ டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் நடைபெற்ற பணியாளர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்விற்கான, 5,000 அழைப்பிதழ்களில் கியூ.ஆர்., குறியீடு டிக்கெட்டுகளை அச்சிட்டு வழங்கி உள்ளது.
இதுபோல, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், மொத்த முன்பதிவு செய்யப்பட்ட கியூ.ஆர்., குறியீடு டிக்கெட்டுகளுடனான அழைப்பிதழ்களை கார்ப்பரேட் நிறுனங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் lmc@cmrl.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.